கண்டியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையானது அடிப்படைவாத குழுக்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்பது ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக பொது நிர்வாக முகாமைத்துவ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் நேற்று கொழும்பில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் முஸ்லிம்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தயாராகவுள்ளோம் எனவும் எதிர்காலத்தில் இது போன்ற துரதிஷ்ட சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக தராதரம் பாராது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சிலர் அரசின் பக்கம் விரல் நீட்டுகின்றனர் எனவும் அதில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அரசியல் நோக்குடன் செயற்படுகின்ற சிலர் இதன் பின்னணியில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு…
கண்டியில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற போதும், தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். மோதல் ஏற்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் முன்னதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை மற்றும் விமானப்படையினர் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமையவே இவ்வாறு பாதுகாப்பு அகற்றப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் முஸ்லிம் மக்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம்..
கண்டி மாவட்டத்தின் திகன, மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கண்டித்து புலம்பெயர் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
வன்முறைகளை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் ஜெனிவா வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. புலம்பெயர் முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதி திகன வன்முறை சம்பவம் தொடர்பான விசேட உபகுழுகூட்டமொன்று ஜெனிவா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன் பலரும் திகன விவகாரம் தொடர்பில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.