“முஸ்லீம்கள் தமிழ்ப் பேசும் மக்களுள் ஒரு அடையாளப்படுத்தப்பட்ட மக்கட் கூட்டம் என்று ஏற்று அவர்களின் அபிலாஷைகளை அவர்கள் பெற்றுக்கொள்ள நாம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”
தமிழ் மக்கள் பேரவை
மக்களுக்கான அறிவு விருத்திப்பணி
கருத்தமர்வும் கலந்துரையாடலும்
நகரசபை மண்டபம், திருகோணமலை
18.03.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில்
தொகுப்புரை
நல்லதொரு கருத்தமர்வின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம். மூன்று பேச்சாளர்களும் தமது பொருளுணர்ந்து என்னுடன் சேர்த்து எம் மக்களின் அறிவை விருத்தி செய்யத் தமது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்கள். இந்தக் கூட்டமானது எம் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒழுங்கு செய்யப்பட்டது. அடுத்து மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களில் நடத்தவிருக்கின்றது தமிழ் மக்கள் பேரவை. உங்கள் அனைவரதும் பங்குபற்றல் எமக்கு மகிழ்வைத் தருகின்றது. தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் சார்ந்த அரசியல் இயக்கம் என்ற முறையில் சரியான பாதையில் பயணம் செய்கின்றது என்றே நாங்கள் நம்பிக்கை கொண்;டுள்ளோம். உங்கள் கேள்விகள் சிலவற்றைப் பரிசீலிக்க முன்னர் எனது இந்தத் தொகுப்புரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
முதலில் பேசிய கலாநிதி கணேசலிங்கம் அவர்கள் வடகிழக்கு இணைப்பிற்கான தந்திரோபாயம் பற்றிப் பரிசீலிக்கையில் இரண்டு விடயங்களை அடையாளங்கண்டார். ஒன்று முஸ்லீம்களின் மனோநிலை மற்றையது தமிழர்களும் முஸ்லீம்களும் கிழக்கு மாகாணத்தில் பிட்டுந் தேங்காய்த் துருவலும் போல் வாழ்வதால் நிலத்தொடர்ச்சி இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டது. முதலில் சமஸ்டியின் அவசியத்தை எங்கள் பல்கலைக்கழக அரசறிவியல்த்துறை தலைவர் எடுத்தியம்பினார். அதாவது வட கிழக்கு மாகாணங்களில் தொன்று தொட்டு வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் காணிகள், இன, மத, மொழி, பண்பாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; என்று கூறி அதற்கான காரணத்தை விளக்கினார்.
இதுவரை காலமும் சமஷ்டிக்குப் பதிலீடாக மாகாண அலகொன்றே பெரும்பான்மை அரசியல் வாதிகளால் எமக்கு வழங்கப்பட்டது என்றார். ஆனாலும் அந்த மாகாணசபை முறை கூட சரியாக அமுல்படுத்தப்படவில்லை. வடக்குக் கிழக்கை இணைத்துப், பின் பிரித்துவிட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரு சமஷ்டி முறையைக் கொண்டுவர இரண்டு உத்திகளைக் கையாள வேண்டும் என்றார். ஒன்று வட கிழக்கு முஸ்லீம் மக்களின் சுயாட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களைத் தமிழ்ப் பேசும் மக்களுள் ஒரு அடையாளப்படுத்தப்பட்ட மக்கட் கூட்டம் என்று ஏற்று அவர்களின் அபிலாஷைகளை அவர்கள் பெற்றுக்கொள்ள நாம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார். இரண்டாவதாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாழும் ஒவ்வொரு கிராமங்களையும் நிலத்தொடர்ச்சியற்ற பகுதிகளையும் வடக்கு மாகாணத்துடன் ஒன்றிணைத்து தனியான அலகை உருவாக்க வேண்டும் என்றார். இதே விடயத்தை நான் காலஞ் சென்ற MHM அஸ்ரவ் உடன் கருத்துறவாடிய ஞாபகம் வருகின்றது. அப்பொழுது நான் கொழும்பு சட்டக் கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளர். அவர் தமது இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்து இருந்த மாணவர். நிலத்தொடர்ச்சியற்ற முஸ்லீம் மக்கள் வாழ் இடங்களை ஒரே முஸ்லீம் அலகினுள் கொண்டு வர வேண்டும் என்று அவர் வாதாடினார். அதன் சாத்தியக் கூறுகள் பற்றி நான் கருத்துக்கள் வெளியிட்ட போது வேறு நாடுகளில் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
பல்லின மக்கள் பக்கம் பக்கம் இருந்து வாழ்ந்தாலும் அவர்களின் நிர்வாகம் வௌ;வேறு அலகுகளின் கீழ் வரலாம் என்பது எம்மால் அடையாளப்படுத்தப்பட்டது. கலாநிதி கணேசலிங்கம் அவர்கள் வட மாகாணத்துடன் தமிழ் மக்கள் பெருவாரியாக வாழும் கிழக்கு மாகாண இடங்களை அதாவது தொடர்ச்சியற்ற அவர்கள் நிலங்களை இணைக்க வேண்டும் என்கின்றார். இது ஒரு அலகு. மற்றையது முஸ்லீம்கள் வாழிடங்கள் சேர்ந்து முஸ்லீம் மக்களுக்கென ஒரு அலகு. வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒரு அலகாக ஆக்கப்பட வேண்டும் என்பதே அவரின் யுக்தி.
தமிழ் மக்களதும் முஸ்லீம் மக்களதும் தனித்துவத்தைப் பேண அவர் வகுத்துள்ள தந்திரோபாயம் இது. இதில் தற்போது கணிசமான அளவு சிங்களமக்கள் சேர்ந்துள்ளமை கவனத்திற்கெடுக்க வேண்டியுள்ளது. ஒரு சிங்கள அலகை நாம் ஏற்படுத்த முடியாது. அவர்கள் தமது விருப்பின் படி தமிழ் அலகினுள் அல்லது முஸ்லீம் அலகினுள் தம்மை உள்ளடக்கலாம் என்பதே எனது கருத்து. சிங்கள மக்களுக்கு தனியொரு அலகு ஏற்படுத்த முடியாததற்குக் காரணம் அவர்கள் 1970ம் ஆண்டு அளவிலேயே பலாத்காரமாக இங்கு கொண்டுவந்து குடியேற்றப்பட்டவர்கள் என்ற காரணத்தால். ஒரு வேளை பொலநறுவையுடன் அவர்களைச் சேர்க்க அரசாங்கம் கருத்து வெளியிடக்கூடும். அது பற்றி நாம் விளிப்பாய் இருக்க வேண்டும்.
அடுத்துப் பேசிய சட்டத்தரணி திரு.யோதிலிங்கம் அவர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு ஒரு வழிவரைபடம் போட்டுக் கொடுத்தார். அவர் கூறியவற்றைச் சுருக்கமாகக் கூறுவதானால்
1. தமிழ் மக்களுக்கான சமஷ்டி முறை என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழ் மக்களே உரையாடல்கள் மூலம் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் அடையாளப்படுத்த வேண்டும் என்றார். உலக நாடுகளில் எதன் சமஷ்டி முறை பொருந்தும் என்று பார்க்க வேண்டும் என்றார்.
2. எமது அடையாளத்தைச் சிதைக்க சிங்கள அரசியல் வாதிகள் எண்ணுவதால் அவர்கள் நடவடிக்கைகளில் இருந்து எம்மைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாகவும் நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றார்.
3. அதற்காக அவர் கொள்கை ரீதியாக இலங்கை அரசாங்கத்தைக் கொண்டு எமது தேசம், இறைமை, சுய நிர்ணயம், சமஷ;டி ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்றார். இதில் வட கிழக்கு இணைப்பும் சுயாட்சி அதிகாரங்களும் அந்த அதிகாரங்களுக்கான பாதுகாப்பும் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட வழி வகுக்க வேண்டும் என்றார்.
மேலும் ஒரு யுக்தியை வெளிப்படுத்தினார்;. சிங்கள தேசத்திற்கும் தமிழ்த் தேசத்திற்கும் இடையே சமூக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும் என்று கூறினார். எனவே அவரின் வழி வரைபடம் பின்வருமாறு அமைகின்றது.
1. தமிழ்ப் பேசும் மக்களுக்கான தேசிய அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்புதல்.
2. புவிசார் அரசியலில் பங்களாளிகளாகுதல்.
3. சமூக மாற்ற அரசியலையும் முன்னெடுத்தல்.
4. அடிப்படைச் சக்திகள், சேமிப்புச் சக்திகள், நட்புச் சக்திகளை அணி திரட்டுதல். அடிப்படைச் சக்திகள் எனும் போது தாயக மக்கள், அதன் நீட்சியாகவுள்ள புலம்பெயர் மக்கள் என்று அடையாளங் காட்டினார்.சேமிப்புச் சக்திகள் என்று மலையக மக்கள், தமிழக மக்கள் உட்பட உலகம் வாழ் தமிழக வம்சாவழித் தமிழ் மக்களை அவர் அடையாளம் காட்டினார்.நட்புச் சக்திகள் என்று சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகம் வாழ் முற்போக்கு ஜனநாயக சக்திகளை குறிப்பிட்டார்.
5. மக்கள் பங்கேற்பு அரசியலை வலுப்படுத்தல்.
6. சர்வதேச சமூகத்தை எமக்குச் சார்பாக அணி திரட்டுதல்.
7. நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு சர்வதேச பாதுகாப்புடன் கூடிய இடைக்கால நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தல்.
8. தமிழ் மக்களுக்கென அதிகார மையம் ஒன்றையும் கட்டியெழுப்புதல்.
9. கிழக்கைப் பாதுகாப்பதற்கு தனியான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல்.
இவை யாவும் உங்களின் விரிவான பரிசீரனைக்காக அவரால் விடப்பட்டுள்ளன. கேள்விகள் இருந்தால் எழுத்து மூலமாக அவரிடம் கேட்கலாம். கடைசியாகப் பேசிய சிரேஸ்ட சட்டத்தரணி மு.ளு .இரட்ணவேல் அவர்கள் முதலில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்தது பற்றிப் பேசி அதன் பின் நடந்தது என்ன என்பது பற்றியும் எடுத்துக் கூறினார். இந்த நிலையில் அரசாங்கம் தனது கட்டுப்பாடுகளில் இருந்து நழுவப்பார்க்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கான சந்தர்ப்பங்கள் உதயமாகியுள்ளதென அடையாளம் கண்டு நாம் என்ன செய்யலாம் என்பனவற்றை அடையாளப்படுத்தினார்.
எனவே மூன்று முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கருத்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை சம்பந்தமாகக் கேள்விகள் இருப்பின் அவற்றை எழுப்பலாம். ஆனால் கேள்விகள் எழுத்தில் தரப்படுதல் வேண்டும். உங்கள் பெயர் தொலைபேசி இலக்கமும் அதில்த்தரப்பட வேண்டும். இதற்குக் காரணம் உங்களுடன் தமிழ் மக்கள் பேரவை வருங்காலத்தில் தொடர்பு வைத்துக்கொள்ள இது உதவும். தயவு செய்து நேரடியாகக் கேள்விகளை மண்டபத்திலேயே கேட்பதைத் தவிருங்கள். இதற்குக் காரணம் உண்டு. கேள்வி கேட்பதென்று சிலர் நீண்ட பேச்சுக்களில் ஈடுபடுகின்றார்கள். மற்றும் சிலர் கேள்வியே கேட்பதில்லை. தாமும் ஒரு பேச்சாளராக மாறிவிடுகின்றார்கள். உங்கள் எல்லோர் குரலையும் கேட்க எமக்கு ஆசைதான். ஆனால் நேரமொன்றுண்டு. நாங்கள் நேரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். பலவித முக்கிய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளவர்கள். ஆகவே கேள்வியை எழுத்தில் தந்தால் அதை வாசித்ததும் பதில் வரத் தொடங்கும். நேரம் சேமிக்கப்படும். ஆகவே அடுத்து கேள்வி நேரத்திற்கு வருவோம் ஒலிவாங்கியை மக்கள் தொடர்பாளரிடம் கையளிக்கின்றேன்.
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
இணைத்தலைவர்
தமிழ் மக்கள் பேரவை