குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சட்டம் இயற்றி அதற்கு என ஒரு குழுவையும் நியமித்து உள்ளோம். ஆகவே அது தொடர்பில் திரும்பவும் பேச விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார். யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் தொழினுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்த பின்னர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இந்தப் பாடசாலைக்கு வரும் வழியில், காணாமல் போனோர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காணாமல் போனோர் விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளதுடன், அதற்கான ஒரு குழுவினையும் நியமித்துள்ளோம்.
காணாமல் போனோர்களின் குடும்பத்தின் நலன் விடயங்களை பார்ப்பதற்கான அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான வேலைத்திட்டத்தினை தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், தெளிவுபடுத்தியுமுள்ளோம்.
ஆகவே, காணாமல் போனோர் விடயம் தொடர்பாக திரும்பவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து நாட்டிற்காக செயற்படுவோம்.
இனங்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். இனங்களுக்குள் உள்ள முறுகல் நிலையை இல்லாமல் ஒழிப்போம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம். எமது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையின் போது, கடந்த தேர்தலில் வடமாகாண மக்கள் எனக்கு அளித்த ஆதரவினைப் பற்றிச் சொன்னார்.
நான் அந்த செய்ந்நன்றியை மறக்கவில்லை. அந்த செய் நன்றியை மறக்காத காரணத்தினால் தான் வடமாகாணத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றேன். எமக்குப் பல அரசியல் பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், அதற்கு அப்பால் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அதுவே, மனிதாபிமானம் என்ற இரக்கமும் நெருக்கமும் என்றார்