குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 1712 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் வரை இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது ஆனால் தற்போது நிலவும் வறட்சியாக காலநிலை காரணமாக குளத்தின் நீர் மட்டம் மிக மிககுறைவாக காணப்படுவதனால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று 19.03.2018 பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற இக்கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விதை நெல்லினை முக்கியமாகக் கொண்டு 1712 ஏக்கரில் நெற்செய்கையும் 300 ஏக்கரில் உபதானியப் பயிர்ச் செய்கையும் மேற்கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், கமநலசேவை திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் அத்துடன் இரணைமடுக்குளத்தின் கீழான விவசாயப் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இரணைமடுக் குளத்தின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் மழைவீழ்ச்சியினால் குளத்தின் நீர் மட்டம் சற்று அதிகரித்திருப்பதன் காரணமாக சிறுபோக நெற்செய்கை பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டது