தனது நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட ஏனைய நாட்டுக்கு சீனா விட்டுக் கொடுக்காது என அந்நாட்டு ஜனாதபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஜி ஜின்பிங் தொடர்ந்து பதவியில் நீடிக்க வகை செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நிரந்தர ஜனாதிபதியாக அவர் நீடிக்கும் வாக்கெடுப்பில் அவர் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய போதே ஜி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனா தனது இறையாண்மையை காப்பாற்றும் எனவும் தனது நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட பிற நாட்டுக்கு விட்டுக் கொடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாயகத்தை முழுமையாக ஒருங்கிணைப்பதற்கும் முயற்சிக்க வேண்டும் எனவும் இது அனைத்து சீன மக்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்த அவர் இது தமது தேசத்தின் அடிப்படையோடு ஒத்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பிரிக்கும் எந்த நடவடிக்கையும் தோல்வியடையும் எனவும் பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள் மக்களின் கண்டனம் மற்றும் வரலாற்றின் தண்டனைகளைதான் சந்திக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருவதன் காரணமாக சீனாவுக்கும் வியட்நாம், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.