ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரும் தமிழக அரசின் மீளாய்வு மனுவை இன்று தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு விதித்து பிறப்பித்த தடை உத்தரவு தொடருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை அனுமதித்து இந்திய மத்திய அரசினால் விடுக்கப்பட்ட அறிவிக்கைக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு தொடர்ந்ததனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இத்தடைக்கு எதிராக தமிழக அரசு மீளாய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனு மீதான வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. இதன்போது குதிரைப்பந்தயங்களுக்கும் பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படாமல் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும் ஜல்லிக்கட்டை பொழுதுபோக்கான அல்லது மத ரீதியான நிகழ்ச்சியாக பார்க்க முடியாது எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது எனவும் இதனால் தமிழக அரசின் மீளாய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.