“தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை, அது நேரத்தை வீணடிக்கும் செயலென நான் கருதினேன்.” என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு கோட்டாபய வழங்கிய செவ்வியில், “யுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னர், புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுவார்த்தைகள் ஏதாவது இடம்பெற்றதா எனவும், புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா? எனவும் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்த கோட்டாபய ” விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை ஒரு புத்திசாலி என நான் குறிப்பிடப்போவது இல்லை. எனினும் “கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அவ்வாறில்லை அவர் புத்திசாலி. மலேசியாவில் இருந்து அவரை கொழும்புக்கு கொண்டுவந்த போது அச்சத்துடன் காணப்பட்டார். அதுவே தமது கடைசித் தருணம் என்று அவர் நினைத்திருந்தார். எனினும் தற்போது அவர், மகிழ்ச்சியாக இருக்கின்றார் ஏனென்றால், அவருடைய கடந்தகாலம் மற்றும் தவறுகளை புரிந்து கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம், அவரை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ நாம் அனுமதித்தோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.