குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு அமர்வுகளில் பங்கேற்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை நேற்றைய தினம் பதிலளித்துள்ளது. சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான பிரதிநிதிகள் இந்த அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படையினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டவிரோத கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்கள், வெள்ளைவான் கடத்தல்கள், வீட்டு வன்முறை, தடுப்புக் காவலில் உயிரிழப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த அமர்வுகளின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.