இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே முதலாம் திகதி இடம்பெறவுள்ள கூட்டங்களையும் பேரணிகளையும் அத்தினத்துடன் இணைந்ததாக கொண்டாடப்படும் வெசாக் வாரத்தை கருத்திற்கொண்டு மே 07 ஆம் திகதிக்கு பிற்போடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மகா சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை தொடர்ந்துவரும் வாரத்தில் பௌத்த சமய கொண்டாட்டங்களை நாடுபூராகவும் கோலாகலமாக மேற்கொள்வதற்கு மகா சங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஏற்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனிடையே மே 07 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதுடன், அத்தினத்தில் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துதல் தொடர்பாக மகா சங்கத்தினரால் விடுக்கப்பட்டுள்ள நீண்ட கால கோரிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு புதிய நடைமுறை ஒன்றை செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இவ்விடயம் தொடர்பில் தனியார் வகுப்புக்களை நடத்தும் நிறுவனங்களிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவும் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.