சாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாதி மற்றும் மத மறுப்பு திருமணங்களில் மூன்றாம் தரப்பினரால், கட்ட பஞ்சாயத்து செய்பவர்களால் பிரச்சினை வருகிறது. அத்துடன் அவர்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படுவதுடன் கௌரவ கொலைகளும் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றில் கடந்த 2010ஆம் ஆண்டு சக்தி வாகினி என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சாதி அல்லது மதம் மறுத்து திருமணம் செய்து கொள்கிற தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்தவழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் மதம் மாறி அல்லது சாதி கடந்து திருமணம் செய்யும் தம்பதியருக்கு மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் அதுபற்றி திருமண அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அதன்பேரில் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது
இந்தநிலையில் நேற்றையதினம் குறித்த வழக்கு தொடர்பில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இந்தவிடயத்தில் அவர்களது உறவில் யாரும் தலையிட முடியாது என கூறியதுடன், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் இதில் தலையிட தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது மட்டுமின்றி, உறவினர்களும் அல்லது மூன்றாவது தரப்பினரும் தலையிடக் கூடாது, மிரட்டல் விடுக்கக்கூடாது, சாதி-மதம் மறுத்து திருமணம் செய்தவர்களுக்கு எதிராக வன் செயல்களை கட்டவிழ்த்து விடவும் கூடாது, மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.