யாழ்.வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தருமலிங்கம் நடகஜேந்திரன் தெரிவாகியுள்ளார். வலி.மேற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை மாலை உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. அதன் போது தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தருமலிங்கம் நடகஜேந்திரனை பிரேரித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேவராஜா ரஜீவனை பிரேரித்தனர்.
அதனை அடுத்து நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்த தர்மலிங்கம் நடகஜேந்திரனுக்கு ஆதாரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 09 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 04 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும் சுயேட்சை குழுவின் மூன்று உறுப்பினர்களும் , ஸ்ரீலங்கா சுதரந்திர கட்சியின் ஒரு உறுப்பினருமாக 20 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரேரித்த தேவராஜா ரஜீவனுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 06 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவின் போது வேலையா சச்சிதானந்தம் தெரிவானார்.