500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இப்பிரச்சினை பாராளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்களை அடுத்து இது தொடர்பான விவாதம் நேற்றைய தினம் மாநிலங்களவையில் ஆரம்பமானது.
இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று ஆரம்பமான போது , எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் இதுபற்றி விவாதிக்க வலியுறுத்தி அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் நிலவியது. இந்தியப் பிரதமர் மோடி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி கோஷமிட்டது. இதன் காரணமாக 2 தடவைகள் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன என தெரிவிக்கப்படுகின்றது.