Home இலங்கை இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க போலிஸ் மாதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு:

இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க போலிஸ் மாதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு:

by admin

இன்று இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க பொலிஸ் மாதிபருக்கு உத்தரவிட்டார்.

இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், விஜேதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதூதீன், சாகல ரத்நாயக்க, சுவாமிநாதன், ருவன் விஜயவர்த்தன, எம்பி ரத்தின தேரர், ஜனாதிபதி செயலாளர், போலிஸ் மாதிபர், முப்படை தளபதிகள், சட்ட ஒழுங்கு அமைச்சு செயலாளர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த நீதி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டணை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையிலேயே ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச விளக்கமளித்தார். அவ்வாறாயின், புதிய சட்டம் வரும்வரை காத்திருக்காமல், உடன் செயல்படும்படி, ஜனாதிபதி கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸ் மாதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதேபோல், முகநூல் கணக்குகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் இனவாத கருத்துகளை செய்திகளாகவோ, கருத்து பதிவுகளாகவோ செய்பவர்களை கண்காணித்து,  அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்க வழி செய்யுமாறும், ஜனாதிபதி தன் செயலாளருக்கு பணித்தார்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மங்களாராம சுமனரத்தின தேரர் மற்றும் தற்போது கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், சிங்கள தீவிர நிலைப்பாட்டாளர் டேன் பிரியாத் என்ற சுரேஷ் பிரியசாத் ஆகியோரை பற்றிய அமைச்சர்களின் விரிவான கருத்துகளை ஜனாதிபதி கேட்டறிந்தார். நாட்டின் தேசிய சகவாழ்வை அழிக்கும் அனைத்து இன, மத தீவிர நிலைபாட்டாளர்களையும் கைது செய்யும் நிலைப்பாட்டை ஜனாதிபதி இதன் பிறகே எடுத்தார்.      

நிந்தனைக்குள்ளான மட்டக்களப்பு கிராம சேவகர்  மனோ கணேசனை  சந்தித்து முறையீடு 

Nov 17, 2016 @ 12:19

 dsc_9257

மட்டக்களப்பு மங்களாராமைய விஹாராதிபதியினால், மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில், கடுமையாக பயமுறுத்தலுக்கும், துவேஷ நிந்தனைக்கும் உள்ளாகிய  கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனை அமைச்சு அலுவலகத்தில்  நேரில் சந்தித்து முறையீடு செய்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, அப்பிராந்திய குடியேற்ற அதிகாரி அரியரத்தினம் சிவகுமார், அயல் வலய கிராமசேவகர் ஜதீஸ்குமார் சயந்தன், ஜமமு தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், அமைச்சு அதிகாரியும் ஜமமு நிறைவாக செயலாளருமான பிரியாணி குணரத்ன, மனித உரிமை மற்றும்  அபிவிருத்தி நிலைய சட்ட உதவியாளர் டொமினிக் பிரேமநாத் ஆகியோர் உடனிருந்தனர்.          

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,

கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதனுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்படி சட்ட ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கு நான் அறிவித்துள்ளேன். அதேபோல் கிராம சேவகர்களின் கடமைக்கு பொறுப்பான உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கும், இது தொடர்பில்  அறிவித்துள்ளேன். இந்நிலையில் பிரபல சட்டத்தரணியும், மனித உரிமையாளருமான இரத்தினவேலின் வழிகாட்டலில் கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், மனித உரிமை ஆணைக்குழுவிலும் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.  இவருக்கு துணையாக மனித உரிமை மற்றும்  அபிவிருத்தி நிலைய சட்ட உதவியாளர் டொமினிக் பிரேமநாத் செயற்பட்டுள்ளார்.    

இந்த பிரச்சினை தொடர்பிலும், நாட்டில் இன்று தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக எழுந்துள்ள பொதுவான பேரினவாத கருத்தோட்டம் தொடர்பிலும் இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சந்திக்க உள்ளேன். அதேபோல் நேற்று மாலை சோபித தேரரின் பெயரில் இயங்கி வரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை சார்ந்த சிங்கள முற்போக்கு சிவில் சமூக பிரதிநிதிகளுடனான முதல்கட்ட சந்திப்பு நடந்தது. இவ்வார இறுதியில் இந்த பெருகி வரும் இனவாதம் தொடர்பில் காத்திரமான நிலைபாட்டைவெளிப்படுத்த உள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்க தலைவர் சரத் விஜெசூரிய என்னிடம் உறுதியளித்துள்ளார்.

நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்தி அதில் அரசியல் இலாபம் பெற இன்று பொது எதிரணி தயாராக இருக்கின்றது. பொது எதிரணி என கூறப்படும் பிரிவினரின் மிக முக்கியமான தலைவர், சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மங்களாராமைய விகாரைக்கு விஜயம் செய்து விஹாராதிபதியிடம் கலந்துரையாடியுள்ளார். இதன் பிறகே கடைசியாக நடைபெற்ற இந்த இனவாத கூச்சல் மட்டக்களப்பில் நடந்தேறியுள்ளது.

நேற்று செங்கலடி பன்குடாவெளியில் இந்த குறிப்பிட்ட மங்களாராமைய தேரர் முன்னெடுத்த அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக பொலிசாரினால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டது. இந்நிலையில், பொதுவாகவும், சமூக ஊடகங்களிலும் கருத்துகள் தெரிவிக்கும்போது, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஏனையோரும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். பிரச்சனைகள் தொடர்பில் எவரும் மிக சுலபமாக கருத்துகளை ஊடகங்களில் கூறலாம். ஆனால், பின்விளைவுகள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொள்ள எவரும் பெரும்பாலும் ஸ்தலத்தில் இருப்பதில்லை. இதுவே இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டு வரும் தூரதிஷ்டவசமான வரலாறு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே பொறுப்புடன் செயற்படும் அதேவேளை, காத்திரமான  மாற்று நடவடிக்கைகளையும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் என்ற முறையில் பொறுப்புடன் எடுத்து நிலைமைகளை நான் கையாண்டு வருவதாக நம்புகிறேன்.     

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More