திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணி நிறுத்தப் போராட்டம் இடம்பெறும்வேளையில் போர்த்துக்கல் சாட்டில் ஜூங்கா திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டமைக்காக பிரபல நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி, இடம்பொருள் ஏவல், செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்திலும் நடிக்கின்றார்.
இந்த நிலையில் கோகுல் இயக்கும் ‘ஜூங்கா’ படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுக்கல்லில் நடைபெற்று வருகிறது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணி நிறுத்தப் போராட்ட தடையை மீறி ஜூங்கா படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொண்டதாக திடீர் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மாதமாக புதிய படங்களை திரைக்கு கொண்டு வரவில்லை. சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டனர். வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகளை நடத்தவும் தடை விதித்து உள்ளனர்.
இதேவேளை வேலை நிறுத்த அறிவிப்புக்கு முன்பே வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டோம் என்றும் படப்பிடிப்புக்கான கட்டணத்தையும் செலுத்தி விட்டோம் என்றும் விசா உள்ளிட்ட வேலைகளும் முடிந்து விட்டதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர். படக்குழுவினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.