தனது படங்களில் இனிமேல் குடி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறாது என்று நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். இன்று திரைப் படங்களில் குடிக்கும் காட்சிகள் இடம் பெறுவது சாதாரணம் ஆகிவிட்டது. அத்துடன் அப் படங்களுக்கு திரைப்பட தணிக்கைப் பிரிவால் ‘யு’ சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற படங்களை பார்க்கும் இளைஞர்கள் குடிப்பது தவறு என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டு ‘தண்ணி அடிப்பது ஜாலி’ என்ற மனநிலைக்கு மாறியுள்ளதுடன் மாணவர்களும் மதுபானச் சாலைகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இளம் இயக்குனர்களும் தமது படங்களில் மதுகுடிக்கும் காட்சிகளை வைப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.எனினும் ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் சமீபகாலமாக தங்கள் படங்களில் இதுபோன்ற காட்சிகள் வேண்டாம் என்று தவிர்த்து விடுகிறார்கள். தற்போது, சிவகார்த்திகேயனும் தான் நடிக்கும் படங்களில் மது குடிக்கும் காட்சிகள் இடம் பெறாது என்று கூறியுள்ளார்.
“முன்பு ‘டாஸ்மாக்‘ காட்சிகளில் நடிப்பதை ஒரு ஜாலியாக நினைத்தேன். ஆனால், இப்போது தான் அதன் கொடிய தாக்கம் எனக்கு புரிகிறது. போதும்… இனி என் படங்களில் இந்த மாதிரி எந்த காட்சியும் இருக்காது. என் இயக்குனர்களும் இனி இதுபோன்ற காட்சிகளை எனக்கு மட்டும் அல்ல, வேறு படங்களுக்கும் வைக்க மாட்டார்கள்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.