குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சிறுபான்மை கட்சிகள் இன்றைய தினம் தீர்மானிக்க உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிராக வாக்களிப்பதா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. இன்றைய தினம் கட்சியின் உறுப்பினர்கள் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் 16 உறுப்பினர்கள் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர். இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அதி உயர் பீடம் இன்றைய தினம் கூடி இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்றைய தினம் கட்சியின் அதிஉயர் பீடம் கூட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்திற்கு அனைத்து உறுப்பினர்களையும் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இன்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான இறுதி முடிவினை எடுக்க உள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரிசாட் பதியூதின் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஆறு உறுப்பினர்கள் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.