குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச சமூகத்தினால் இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. யுத்தம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டு மணித்தியாலங்களாக பேசப்பட்டு வந்ததாகவும் தற்போது அந்த நிலைமை மாறி 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்படக்கூடிய அபாயம் காணப்பட்டதாகவும் தற்போது அந்த நிலமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் யுத்தம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு சர்வதேச சமூகம் போதியளவு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தை அமைக்கும் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.