உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பியின் ஆதரவு கோரிய விவகாரத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வன்னிப் பிரதேசத்தில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நேற்றுப் பேசப்பட்டுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். யாரைக் கேட்டு ஈ.பி.டி.பியுடன் பேசியுள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் “ஈ.பி.டி.பியுடன் நாங்கள் பேசவில்லை , மதத் தலைவர்கள், வர்த்தக சமூகத்தினரே பேசினர்” என கூட்டமைப்பு தலைமையால் பதில் அளிக்கப்பட்டுள்ளது. “அப்படியானால் அவர்களே பேசவேண்டியதுதானே, பின்னர் ஏன் நாடாளுமன்ற றுப்பினர்களான மாவை, மற்றும் சுமந்திரன் ஆகியோர் டக்ளஸ் உடன் அலைபேசியில் பேசினீர்கள்” என சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நாங்கள் ஆதரவு கோரிப் பேசவில்லை” என பதிலளிக்கப்பட்டுள்ளது. “நாராந்தனையில் உங்கள் (மாவை) தலையில் வெட்டு விழுந்தது. இருவர் உயிரிழந்தனர். அதை எல்லாம் மறந்து டக்ளஸ் உடன் எப்படி பேசினீர்கள்” என்றும் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நான் பேசவில்லை” என மாவை.சேனாதிராசா மறுத்துள்ளார். “நீங்கள் எங்களிடம் கேட்ட பின்னரா ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதைவிட எதிர்கட்சியாக இருப்பேன் என அறிக்கை விட்டீர்கள் எம்மை கலந்தாலோசித்து அறிக்கை விட்டிருக்கலாம்தானே” என சிறிதரனிடம், மாவை. கேள்வி எழுப்பியுள்ளார்.
“நீங்கள் டக்ளஸுடன் பேச முன்னர் எங்களிடம் கேட்டிருக்கலாமே ?” என சிறிதரன் திருப்பி கேள்வி எழுப்பியுள்ளார். “அந்தக் காலத்தில் நீங்கள் இங்கு இல்லை” என பதில் வழங்கப்பட்டதும், “நான் இல்லாவிடினும் இங்குள்ளவர்களுடனாவது கேட்டா டக்ளஸுடன் பேசினீர்கள்” என சிறிதரன் திருப்பிக் கேள்வி எழுப்பியுள்ளார் .
இதே வேளை டக்ளஸுடன் பேசியமை தவறு என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும், இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.