211
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
” வெலி ஓயா ஆகிவிட்ட தமிழர் தொன்னிலம் ” என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நீண்டதொரு உரையை வடமாகாண சபையில் இன்றைய தினம் நிகழ்த்தி இருந்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.
அதன் போது வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் உரையாற்றும் போது ,
தமிழ் மணம் பரப்பி பரந்து விரிந்து கிடந்த தமிழர்களின் தொன்னிலமான மணலாற்றுப்பிரதேசத்தில் தற்போது சிங்களக்குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றுக்கு புதிய சிங்களப்பெயர்கள் சூட்டப்பட்டு தமிழர்களின் அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. ஒரு தொன்னில தமிழ்ப்பிரதேசமாக தமிழ்ப்பெயர்களோடு செழித்திருந்த பகுதியானது தற்போது சிங்களப்பெயர்களோடு சிங்களப்பகுதிகளாக காட்சியளிக்கின்றன.
முந்தைத்தமிழனின் குரல்கள் ஓங்கி ஒலித்த மணலாற்று மண்ணை இப்போது நிறைப்பதெல்லாம் குடியேற்றப்பட்ட சிங்களர் குரல்களே. மணலாறு என்ற தமிழர்களின் தொன்னிலப்பிரதேசம் வெலி ஓயா ஆக திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் தாயகப்பிரதேசங்களாகிய வடக்கையும் கிழக்கையும் துண்டாடுவதற்காக மணலாற்றுப்பகுதியில் சிங்களக்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இக்குடியேற்றங்களை மேற்கொள்வதற்குரிய கருவியாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை பயன்படுத்தப்பட்டுவருகிறது.
தமிழர்களின் பல பண்ணைகளுடன் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வியாபித்திருந்த மணலாற்றுப்பகுதியில் இருந்த மக்கள் 1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்டார்கள்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சராக மதிப்பிற்குரிய காமினி திசாநாயக்கா அவர்கள் பதவி வகித்தபோது பேராசிரியர் காலிங்க குணவர்த்தன அவர்கள் நீண்டதொரு திட்டமிடலின் அடிப்படையில் இவ்வலயத்தின் மீது அதிக அக்கறை செலுத்துமாறு கூறப்பட்டதற்கிணங்க இப்பிரதேசம் மகாவலி எல் வலயமாக 1982இல் அறிவிக்கப்பட்டது. இவ்அறிவித்தலுக்கு எதிராக அப்போதைய எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஆனாலும் சிங்கள குடியேற்றங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் 1984 காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இருப்பினால் சிங்கள குடியேற்ற முன்னெடுப்புக்கள் தடைப்பட்டு இருந்தன.
இதன்பின் 1984 மார்கழிமாதம் இப்பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் நடமாடல்கள் அதிகரித்துள்ளன. இப்பிரதேச காடுகளுக்குள் இவர்கள் ஊடுருவி இருக்கின்றார்கள் இதனால் இப்பிரதேசங்களில் உள்ள காடுகள் மீது இராணுவ நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது இக்காடுகள் எரியூட்டப்படலாம். இதன்போது ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்காக பொது மக்கள் 24 மணித்தியாலத்திற்குள் இவ்விடங்களை விட்டு வெளியேற வேண்டும் என இராணுவத்தால் கவச வாகனங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனால் நாயாற்றுக்கு மேற்கேயான ஆறு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மக்களும் உடனடியாக இடம்பெயர்க்கப்பட்டனர்.
இவர்கள் இடம்பெயர்ந்ததும் மக்கள் சூனியப் பிரதேசமான இப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவோ அல்லது காடுகள் தீயிட்டுக் கொழுத்தப்படவோ இல்லை. ஆனால் சிங்களக் குடியேற்றங்கள் விரைவுபடுத்தப்பட்டன.
1984 மார்கழி மாதம் வெளிப்படையான அறிவித்தல் மூலம் வெளியேற்றப்பட்ட கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த மக்கள் இறுதி போர் முடிவுற்ற பின்னர் 2010-2011 காலப்பகுதிகளில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டனர்.
மீள்குடியேற்றப்பட்ட இந்த மக்களின் 90சதவீதம் ஆனோர் விவசாயிகளாவார். இடப்பெயர்விற்கு முன்னர் தமது நாளாந்த இருப்பிற்காக விவசாயம் செய்த நிலங்களை இவர்கள் மீளக்குடியேறியபோது இழந்திருந்தனர்.
இவர்களால் தலைமுறை தலைமுறையாக பயிரிடப்பட்டு வந்த இந்த வயல் நிலங்கள் மகாவலி எல் வலயத்தின் ஒரு அபிவிருத்தி திட்டம் எனக்கூறப்படும் “கிவுல் ஓயா” திட்டத்தின் கீழ் சிங்கள மக்களுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் வழங்கப்பட்டு, இன்று சிங்கள மக்களால் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது.
தமது அன்றாட வாழ்வை நகர்த்திச்செல்ல நாதியற்றவர்களாக மிகுந்த வறுமையில் இன்று இம்மண்ணுக்குரியமக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுடைய வயல்நிலங்கள் மகாவலி எல் திட்டத்தின் மூலம் சிங்களமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வயற்காணிகள் மீதான தமிழ் மக்களின் உரிமைகள் நீக்கப்படாமலும் உரிமைகோரும் தமிழ் மக்களுக்கு முறையான முன்னறிவித்தல்கள் ஏதும் இன்றியும் இவை சிங்களமக்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1950, 1960, 1970 காலப்பகுதியில் தமிழ்மக்களுக்கு இக்காணிகளுக்கான உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு வழங்கப்பட்ட உத்தரவுப்பத்திரங்களில் சில, கடந்த முப்பது ஆண்டுகால தொடர்ச்சியான இடப்பெயர்வுகளின் பின்னரும் இன்றும் இம்மக்களிடம் இருக்கின்றன.
காணிக்கட்டளைச்சட்டத்தின்படி ஒரு காணிக்கு இரண்டு ஆவணங்கள் இருந்தால், எது காலத்தால் முந்தைய ஆவணமோ அதற்கே முன்னுரிமை உண்டு. ஆனால் இச்சட்டமும் இங்கு கணக்கெடுக்கப்படவில்லை. இதே காணிகளுக்கான புதிதான அனுமதிப்பத்திரங்கள் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சவின் ஒப்பத்தடன் தற்போது மொனரவெவ என்று அழைக்கப்படும் மயில் குளம் என்ற பகுதியில் வைத்து முன்னைய ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது.
2009ஆம் ஆண்டில் மணலாற்றுப்பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியபின்னரே இவ்வயற்காணிகளில் சிங்களமக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தொடங்கினர்.
மகாவலி எல் வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் 1982, 1988, 2013 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. இவ்வறிவித்தல்களுக்கு அமைய, மகாவலி எல் வலயம் மாங்குளம் ஏ34 வீதி வரையிலும் முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் வரையிலும் விரிவாக்கப்பட்டுள்ளமையை அறியமுடிகிறது. இவ்விரிவாக்கம் தற்போதைய நிலைமைகளின் பேரிடரை உணர்த்துவதாக உள்ளது.
வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவின் தோற்றமும் நிருவாக எல்லைகளும்.
வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவு என்பது கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவின் தென்மேற்குப்பகுதிகள், வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவின் தெற்கு மற்றும் தென்கிழக்குப்பகுதிகள், வனவளத்துறை திணைக்களம், வனவளசீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் பகுதிகளை கொண்டதாக எவ்வித பணிநிலை அறிவித்தல்களும் நடைமுறைகளும் இல்லாமல் உருவாக்கப்பட்டதாகும்.
தொடக்கத்தில் இப்பிரதேசசெயலாளர் பிரிவு அநுராதபுரமாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசு நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரது ர்யுகுஃ2ஃ4ஃனுளுநுவுஃ07ஃ0483 ஆம் இலக்க கடிதத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
2013ஆம் ஆண்டில் நிருவாக எல்லைகள் எதையும் கொண்டிராத இப்பிரதேசசெயலாளர் பிரிவுக்கு 2013.05.17ஆம் திகதிய 1811ஆம் இலக்க வர்த்தமானி மூலம் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட எல்லைகள் 171ஃ7 ஆம் இலக்க 2012 சனவரி 24ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவின் எல்லைகளுடன் மேற்பொருந்துவதாக உள்ளது. இதனால் இப்பகுதியில் மட்டும் மாவட்டத்தின் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகளுக்குள் உள்ளடக்கப்படுகின்றது.
இப்பகுதியினுள்ளேயே மீள்குடியமர்ந்துள்ள எமது தமிழ் மக்களுடைய வயற்காணிகளும் அடங்குகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவானது ஒன்பது கிராம அலுவலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்போது 3336 குடும்பங்களுடன் 11189மக்களைக்கொண்டதாக நிருவகிக்கப்பட்டு வருகின்றது. இவையாவும் தமிழ்மக்களின் குடியிருப்புகளாகவும் சிங்களமக்களால் நெற்செய்கை செய்யப்படும் இடங்களாகவும் காட்சியளிக்கின்றன.
கொக்கிளாய் முகத்துவாரக்கையகப்படுத்தல் .
எமது வடமாகாணத்தில் வளம் கொழிக்கும் ஆறும் கடலும் சங்கமிக்கும் பொற்பூமி இதுவாகும். இந்த காணிகள் அனைத்தும் பின்வரும் தமிழ் மக்களுக்கு சொந்தமானவை. முறையே.
01.கலிஸ்ரப்பிள்ளை யசிந்தா மூன்று ஏக்கர் 02.செபமாலை செபஸ்தியாம்பிள்ளை ஒரு ஏக்கர் 03.சந்தியாப்பிள்ளை சீமான்பிள்ளை இரண்டரை ஏக்கர் 04.செபஸ்தியாம்பிள்ளை மரியமதலேனம் ஒன்றரை ஏக்கர் 05.சிந்தாத்துரை மூன்று ஏக்கர் 06.தம்பி ஐயா ஒன்றரை ஏக்கர் 07.சிங்கராசா மூன்றரை ஏக்கர் 08.மனுவேல்பிள்ளை இவர் முறைப்பாடு செய்யவில்லை.
கொக்கிளாய் முகத்துவாரத்தில் உள்ள இந்தக்காணிகள் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டவையாகவே காணப்படுகிறது. 1984இல் இங்கிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டபின்பு இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் சிங்களமீனவர்கள் அப்பகுதியில் குடியேற்றப்பட்டு பாதுகாப்புடனான மீன்பிடித்தொழில் கடலிலும் கடனீரேரியிலும் செய்து வருகின்றார்கள்.
1963ஆம் ஆண்டு கொக்கிளாய் கடற்கரைப்பகுதியில் 12 கரைவலைப்பாடுகள் காணப்பட்டன. இதில் பதினொரு கரைவலைப்பாடுகள் தமிழ் மக்களுக்கு உரித்துடையனவாக இருந்தன. மிகவும் சிறியளவிலான ஒரு கரைவலைப்பாடு மட்டும் யோசப்பு என்கின்ற சிங்களவருக்கு காணப்பட்டது. அவர் பருவகாலத்தில் மட்டும் இங்கு வந்து தொழில் செய்பவராக காணப்பட்டார். தற்போது இவ் 12பாடுகளும் சிங்களவர்களுக்கு உரித்துடையனவாக மாறிவிட்டது.
இப்படியாக இப்பகுதியில் தற்போது பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களாக 272 குடும்பங்களும் பதிவுசெய்யப்படாத குடும்பங்களாக 232 குடும்பங்களுமாக மொத்தம் 504 குடும்பங்கள், நீர்வழங்கல் பிரிவின் 2016.06.02ஆம் திகதிய மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக்கூட்ட புள்ளிவிபரப்படி கொக்கிளாய் முகத்துவாரத்தில் மட்டும் வசித்துவருகின்றார்கள்.
இங்கு குடியேற்றப்பட்டவர்களுக்கு காணிவழங்கும் நடவடிக்கையில் காணிகள் அளவீடு செய்து வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு மூன்று தடவைகள் தேசியவீடமைப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் நிலளவைத்திணைக்களத்தினர் வந்தபோது அவர்களுடன் வாதாடி அவர்களை திருப்பி அனுப்ப முடிந்தது. இப்போது அங்கிருக்கும் குடும்பத்தவர்கள் காணி அற்றவர்கள் என்ற மாவட்டச்செயலக புள்ளிவிபரத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு இங்கு காலங்காலமாக தமிழ் மீனவர்கள் கடற்றொழில் செய்து வந்த இறங்குதுறைகூட சிங்களவர்களின் கைகளில் தான் உள்ளது. இவ்விறங்குதுறை பணியாளர்களால் (உத்தியோகத்தர்களால்) அளவிடப்பட்டு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளரால் தமிழர்களின் மீனவ அமைப்புக்கு அனுமதிக்கடிதம் வழங்கப்பட்டது.
இதன்பின் மீனவர்கள் தமது இறங்குதுறைக்கான வாடியை அமைத்தல் தொடர்பில் கொழும்பு மீன்பிடித்திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய முல்லைத்தீவு மீன்பிடித்திணைக்களத்தினரால் மாவட்டநீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்களுடைய படகுகளை வைத்து தொழில் செய்ய வழியற்றவர்களாக தமிழ் மீனவர்கள் கொக்கிளாய் பகுதியில் உள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது.
பௌத்த விகாரைகள், புத்தர்சிலைகள்
குடியேற்றங்களுக்கு முன்னேற்பாடாக பௌத்தர்களே இல்லாத இடத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கும் செயல்பாடும் முன்னெடுக்கப்படுகின்றது. போர்க் காலத்துக்கு முன் ஒரு விகாரையும் இல்லாமலே முல்லைத்தீவு மாவட்டம் காணப்பட்டது. இப்போது 11விகாரைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டி காட்டுகின்றது.
கொக்கிளாயில் இராணுவத்தினரின் துணையோடு தமிழ் மக்களின் காணிகளிலே, அம்மன் கோவில் இருந்த இடத்திலே, தற்போது பௌத்த விகாரை கட்டப்படுகின்றது. நாயாற்றுப்பகுதியிலும் பிள்ளையார் சிலைக்கு அருகில் விகாரை அமைக்கப்படுகின்றது. அதற்கு முன்பாக இராணுவ முகாம் இருக்கின்றது. இவை எல்லாம் பாரிய குடியேற்றத்துக்கான ஆரம்ப வேலைகளாக கருத முடிகிறது.
அடுத்த புதிய திட்டமிடல்
போர் முடிவுற்று மக்கள் மீள்குடியமர்ந்த மிகவும் நெருக்கடியான 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போது இருந்த இராணுவத்தளபதியின் அழுத்தத்தால் நாயாற்றுப்பகுதியில் 78 படகுகள் கொண்டு தென்னிலங்கை மீனவர் தொழில் செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த 78 என்பது அடுத்த அடுத்த ஆண்டுகளில் தற்போது 300 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் தடைசெய்யப்பட்ட தொழில்களையே செய்கின்றார்கள். சமூகமுரண்செயல்களுக்கு துணைபோகின்றார்கள். குறிப்பாக இப்பகுதியில் கசிப்பு விற்கப்படுவது பிடிபட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமை, சிலாபம் “இரணவில” பகுதியில் அண்மையில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டமை தொடர்பிலான குற்றவாளி இப்பகுதியில் வைத்த கைதுசெய்யப்பட்டமை ஆகியவற்றை குறிப்பிடலாம்.
கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட சிங்களர்க்கு கரைவலை அனுமதிப்பத்திரங்கள் கொழும்பு கடற்தொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு, அங்கும் தொழில் செய்கின்றார்கள். அவர்கள் இப்பகுதியில் அத்துமீறி தொழில்செய்கின்றார்களா என பார்க்கச்சென்ற இரண்டு கிராம அலுவலர்கள் அங்கு தாக்கப்பட்டனர். இன்றுவரை இதற்கான தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 2018.03.20 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் ஆளுநர் அவர்களின் சார்பாளர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் சார்பாளர், மாவட்டச்செயலர் உள்ளிட்டோருடன் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இங்கு நாயாறு , கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் வெலி ஓயா என்று அழைக்கப்படும் மணலாற்றுப்பகுதி காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களின் சார்பாளர் என்ற வகையில் கூட எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நீண்டகால அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பில் பாதிப்பை உண்டாக்கக்கூடியவகையில் கருத்துப்பரிமாற்றங்கள் அக்கூட்டத்தில் நடந்துள்ளதை அறியமுடிகிறது. எனவே அதி அத்தியாவசியமானது என்பதால் இதனை சமர்ப்பிக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட மாகாணத்தின் மக்கள் பரம்பல் மாதிரியை இயற்கைக்கு முரணான வகையில் மாற்றுவது அரசின் காணிக்கொள்கையாக அமையக்கூடாது. இது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரை 9.1.2.4 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது இப்பகுதிகளில் நடைபெறும், நடைபெற்று கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகின்றது.
இங்கு குறிப்பிட்டப்பட்ட அத்தனை குடியேற்றங்களோடு நாயாறு ஆற்றுக்கு தெற்குப்பக்கமாகவும், மேற்குப்பக்கமாகவும் உள்ள மிகநீண்ட பிரதேசங்களை குடியேற்றங்களுக்காக கைப்பற்றவுள்ளார்கள். இக்காணிகள் உப உணவுப்பயிர்ச்செய்கைக்காக ஏற்கனவே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டவையாகும். வனத்துறையினரதும், இராணுவத்தினரதும் கையகப்படுத்தலால் தமிழ் மக்கள் இப்பகுதிக்குள் நுழைய முடியவில்லை.
கிழக்கு மாகாணத்தில் கல்லோயா உள்ளிட்ட பல தமிழ்க்கிராமங்கள் இந்த வடிவங்களிலேயே பறிக்கப்பட்டன. இங்கும் தமிழ் மக்கள் சிறுபான்மையாக்கப்படவுள்ளார்கள் . இதனால் காலப்போக்கில் தமிழ் மக்கள் இங்கிருந்தும் வெளியேறவேண்டி ஏற்படும். தமது நிலங்களை விட்டு வெளியேறாமல் இருக்கும் தமிழர்கள் சிங்களமக்களின் சார்பாளர்களிடமும் சிங்கள பணியாளர்களிடமும் தமது ஒவ்வொரு சிக்கலுக்கும் செல்லவேண்டி ஏற்படும்.
தற்போது முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் இச்சிங்களமயமாக்கலை தடுத்து நிறுத்தாவிட்டால் முல்லைத்தீவில் குலைக்கப்படவிருக்கும் தமிழர் பெரும்பான்மை தொடர்ந்தும் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவும் நிலை ஏற்படும்.
திட்டமிட்ட வகையில் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இக்குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டியவை ஆகும்.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் மகாவலி எல் வலய எதேச்சையான போக்கு ஏற்றுக்கொள்ளமுடியாததாகும். எமது மண்ணில் நாம் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக்கப்படும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இன்று முல்லைத்தீவில் கட்டவிழ்க்கப்படும் சிங்களமயமாக்கல் முன்னெடுப்புகள் நாளை வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவும்.
இப்போது கரைதுறைப்பற்றுடன் இருக்கும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணியில் வாழும் அப்பகுதி பெரும்பான்மை தமிழ் மக்களையும் தற்போது மேற்கொள்ளப்பட உள்ளதாக அறியப்படும் மாயுபுர குடியேற்றத்தையும் மகாவலி எல் அபிவிருத்தி திட்டத்தின் போர்வையில் வெலி ஓயா என்று அழைக்கப்படும் மணலாற்றுடன் இணைக்கப்படுவதற்கான முயற்சி நடைபெறுவதை அறியமுடிகிறது.
இதனால் இவ்வுரையின் ஊடாக மூன்று கோரிக்கைகளை இந்த சபையில் முல்லைத்தீவை சார்பாக்கும் ஒரு மக்கள் சார்பாளன் என்றவகையிலும் மாறுகின்ற ஆட்சிமாற்றங்களிலும் மாறாது தொடர்ந்தும் எல்லைநிலங்களை பறிகொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு தமிழ் மண்ணின் மகன் என்ற வகையிலும் முன்வைக்கவிரும்புகிறேன்.
கோரிக்கை ஒன்று.
தமிழர் நிலங்களில் குறிப்பாக வடமாகாணத்தில் இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட சிங்களமயமாக்கல் முன்னெடுப்புகளையும் தற்போது முல்லைத்தீவு உட்பட ஏனைய நான்கு மாவட்டங்களிலும் நிகழ்த்தப்படும் சிங்களமயமாக்கல் முன்னெடுப்புகளையும் தகுந்த வல்லுநர்குழாம் ஒன்றை நிறுவி அவர்களின் ஊடாக ஆவணப்படுத்தல்.
இவ்வாவணப்படுத்தல் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சிங்களமயமாக்கல் தொடர்பான வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ ஆவணமாக இருத்தல் வேண்டும்.
கோரிக்கை இரண்டு
தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் இக்குடியேற்றங்களை உடன் நிறுத்த வேண்டும் என்ற எமது அழுத்தமான கருத்தினை அரசாங்கத்துக்கு உரிய வகையில் தெரியப்படுத்துதல்.
கோரிக்கை மூன்று
தற்போது முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படவிருக்கும் சட்டத்திற்கு புறம்பான மாயபுர குடியேற்றத்தை தடுத்திநிறுத்துமுகமாக வடமாகாணசபையை சார்பாக்கும் அனைத்து மதிப்புறு மாகாணசபை உறுப்பினர்களும் குறித்த இடத்திற்கு வருகைதந்து தொடரும் சிங்களமயமாக்கலை எதிர்த்து வலிமையான கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் ஒருநாள் கவனயீர்ப்பை மேற்கொள்ளவேண்டும். என மூன்று கோரிக்கைகளையும் சபையில் முன்வைத்து தனது உரையை நிறைவு செய்தார்.
Spread the love