அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான பார்க் குன்-ஹேக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பார்க்குக்கு, சிறைத்தண்டனையுடன் 17 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. ‘எங்களால் உதவமுடியாது, ஆனால் இதற்கு அவர்தான் பொறுப்பு என கண்டிப்புடன் தெரிவிக்க முடியும்’ என்று நீதிபதி கூறினார்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்படும்போது பார்க் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
பார்க் இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கவில்லை என்பதுடன், முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றம் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். தனது மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.