குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகருக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையை திரும்ப பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று மாலை அறிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சுதர்ஷன குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நிலைப்பாடு எனவும் ஐக்கிய தேசியக்கட்சி அப்படியான தீர்மானத்தை எடுக்கவில்லை என பிரதமர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையை திரும்ப பெறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இப்படியான தீர்மானத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற குழுவே எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பான மேலதிக தீர்மானம் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் எடுக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.