குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தெருக்களில் நின்று உரிமைக்காகவும் காணாமல் போன உறவுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் எமது மக்கள் தம்மிடம் மீதமுள்ள அற்ப சொற்ப நம்பிக்கையின் அடிப்படையிலேயே எம்மை இச் சபைக்கு தம் பிரதிநிதிகளாக தெரிவு செய்து அனுப்பியுள்ளார்கள் அவர்களின் நம்பிக்கைக்கையைச் சிதறடிக்காத வகையில் இலட்சிய வழிநின்று எனது அரசியலை முன்னெடுப்பேன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாநகர சபை முதல் நாள் அமர்வு இன்று (11.04.2018) புதன்கிழமை நடைபெற்றது. அமர்வில் உரையாற்றிய பார்த்திபன்,
நான் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கந்தர்மடம் தெற்கு எட்டாம் வட்டாரத்தல் போட்டியிட்டு இவ் கௌரவ சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய நேர்மையான உறுதியான அரசியல் நிலைப்பாடு மற்றும் என்னுடைய அப்பாவின் கீர்த்தி ஆகியவற்றின் மூலமே எனது இவ் வெற்றி சாத்தியமானது என்றே நான் கருதுகின்றேன்.
போராலும் மேலாதிக்க அடக்கு முறைகளாலும் இன ரீதியான ஒடுக்கு முறைகளினாலும் தனி நபர் சுயநல அரசியலாலும் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர்களாக கைவிடப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிக்கும், நான் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் தெருக்களில் நின்று உரிமைக்காகவும் காணாமல் போன உறவுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் எமது மக்கள் தம்மிடம் மீதமுள்ள அற்ப சொற்ப நம்பிக்கையின் அடிப்படையிலேயே எம்மை இச் சபைக்கு தம் பிரதிநிதிகளாக தெரிவு செய்து அனுப்பியுள்ளார்கள் என்பதனை நான் உறுதியாக நம்புகின்றேன்.
அந்த வகையில் காலம் எம் மீது பொறுப்புக்களை சுமத்தியிருக்கின்றது
சுயநலம் பேணும் அரசியலுக்கப்பால் மக்கள் நலன்பேணும் அரசியல் பணி செய்யவேண்டிய தருணம் இது எனது கருத்து மட்டுமல்ல எனது கடமையாகவும் இருக்கும் என்பதனை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். எமது மக்களுக்கு வார்த்தைகளால் மட்டுமல் செயல்களினாலும் நன்றி செலுத்த வேண்டிய தருணம் இது.
அந்தவகையில் எனது பதவிக்காலத்தில் இந்த கௌரவ சபைமூலம் எனக்கு கிடைக்கும் சகல கொடுப்பனவுகள் வளங்கள் அனைத்தையும் மக்கள் பணிக்கு முழுமையாக வழங்குவேன். என்பதனையும் இங்கு உறுதியுடன் பதிவு செய்கின்றேன். மக்கள் எனக்களித்த வரலாற்றுக் கடமைகளை விசுவாசத்துடனும் வினைத்திறனுடனும் பொறுப்புடனும் செயற்படுத்துவேன்
அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சி நடத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல மக்களுக்கு சேவை புரியும் பணி மக்களின் நலவாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு என்ற தமிழ் தேசியத்தின் அதன் தனித்துவ இருப்பின் தன்னிகரற்ற ஒரு பெருந்தலைவனின் வரிகளை என் நெஞ்சில் நிறுத்தியும் தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக் கனவுகளுடன் இறுதி வரை பயணித்த என் தந்தையின் உறுதியான அடிச்சுவட்டில் நான் பயணிப்பேன் என்றும்
யாழ்.நகரம் சகல வளங்களுடன் கூடிய பாரம்பரிய தமிழர் பண்பாட்டு மையமாக உயர ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை சபையில் முன்மொழிவேன் என்பதுடன் எமது இனத்தின் வளர்ச்சியை அதன் தனித்துவத்தை அதன் பொருளாதாரத்தை அழிக்கும் அல்லது முடங்கச்செய்யும் தமிழ் தேசத்தில் இனப்பரம்பரை மாற்றியமைக்கும் அத்தனை நடவடிக்கைகளையும் எதிர்க்கவும் தயங்கமாட்டேன் என்றும்
மக்களுக்கான மக்கள் நலன் போணும் மக்களின் அரசியல் பணியை மக்களுடன் இணைந்து முன்னெடுப்பேன் என எமது இனத்தின் விடுதலைக்காக அரசியல் சுதந்திரத்திற்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மறவர் மீதம் மக்கள் மீதும் சத்தியம் செய்து கொள்ளுகின்றேன்.
இது என வாக்குறுதி மட்டுமல்ல மனஉறுதியும் கூட, வாழ்க தமிழ்! வளர்க தமிழ்த் தேசம்!!, வெல்க தமிழர் விடுதலை லட்சியம்.!! – என்றார்.