காவல்துறை நிதிக்குற்றவியல் பிரிவால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பிணை நிபந்தணைகளை ஒப்புக்கொள்ளாமையால் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். மஹிந்தானந்தவுக்கு 35,000 ரூபாய் ரொக்கப் பிணையும், தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணை இரண்டிலும் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், அவரது வெளிநாட்டு பயணங்களுக்கும் நீதவான் தடைவிதித்ததுடன், அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். எனினும், நீதிமன்ற பிணை நிபந்தனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஒப்புக்கொள்ள மறுத்ததால்,அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இணைப்பு2 – மகிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுதலை
Apr 16, 2018 @ 11:03
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது
வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை சென்றபோது அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே கைது…
Apr 16, 2018 @ 08:25
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை சென்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் நிதி முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.