குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் விடுவிக்காதமையால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச. சஜீவன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில் ,
வலி.வடக்கில் கடந்த 27 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 680 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த வாரம் மீள உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. அந்நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆவளை சந்தியில் இருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடிசந்தி வரையிலான கட்டுவான் வீதிக்கு செல்லும் வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாடிற்குள் உள்ளது.
அதனால் அந்த வீதியினை பொதுமக்கள் பாவிக்க முடியாத வகையில் இராணுவத்தினர் வீதிக்கு குறுக்காக உயர் பாதுகாப்பு வலய முள் வேலிகளை அமைத்துள்ளனர்.
அதனால் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் அவற்றுக்கு செல்லும் வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளமையால் ,மக்கள் தமது காணிகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக மேலும் தெரிவித்தார்.