காவிரி போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வலியுறுத்தி நடிகர் சிம்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்கள், திரைப்பட துறையினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குணர்கள், நடிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சென்ற நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டார்.
அவர் காவல்துறையிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாக கூறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மன்சூர் அலிகான் சிறையில் இருந்து வருகிறார். கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர்அலிகானை விடுவிக்கக் கோரி காவல்துறை ஆணையக அலுவலகத்திற்கு சிம்பு இன்று காலை 9.45 மணிக்கு வந்தார். அலுவலகத்தில் உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தார்.
அப்போது அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:-
“காவிரி பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்தனர். போலீசாரை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் போராட்டத்தின்போது காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். அதற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருப்பது முறையல்ல. அவருக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டு தினமும் மருந்து உட்கொண்டு வருகிறார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். போலீசாரிடம் தவறாக நடந்திருந்தால் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அவரது குடும்பத்தினர் என்னை சந்தித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் கமிஷனரை சந்தித்து முறையிட்டேன்.” என அவர் கூறினார்.