Home இலங்கை ஆனையிறவின் அடையாளம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

ஆனையிறவின் அடையாளம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

by admin

 ஆனையிறவு வரலாறு முழுவதும் முக்கியமானதொரு பகுதியாக இருந்துள்ளது. போர்த்துக்கேயர்கள், டச்சுக்காரர்கள், பிரித்தானியர்கள் என இலங்கையை ஆதிக்கம் செலுத்தியவர்கள் இப் பகுதியை தமது கோட்டையாக வைத்திருந்தனர். அதன் பின்னர், இலங்கை இனப்பிரச்சினையின்போதும் ஆனையிறவு யாருடைய கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே இராணுவ பலம் தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியலும் நிர்ணயிக்கப்பட்டது. அந்தியர்களாலும் இலங்கை அரச படைகளாலும் ஆளப்பட்டு வந்த ஆனையிறவை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிய நாள் இன்றாகும். ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய நிகழ்வு அந்த இயக்கத்தின் போராட்ட நகர்வுகளில் முக்கியமானதாக அமைந்ததுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலம் குறித்த பிரமிப்பு தெற்கிலும் உலக அளவிலும் ஏற்பட்டது. பின் வந்த அரசியல் சூழலையும் இந்த இராணுவ பலமே தீர்மானித்தது. இன்றும் ஆனையிறவை கடக்கும் எவருக்கும் பல்வேறு நினைவுகள் கிளரும். 2009 யுத்தத்தின் பின்னரான காலத்தில் ஆக்கிரமிப்பில் உடைந்துபோயிருந்த ஆனையிறவு குறித்து அன்றைய நாட்களில் குளோபல் தமிழ் வெளியிட்ட கட்டுரை இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.
  • ஆசிரியர்

ஈழ மண்ணில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பின் அடையாளத்தை காட்டி தமிழர்களின் நெஞ்சில் மாபெரும் காயத்தை ஏற்படுத்தி நிற்கிறது ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபி. ஆனையிறவு என்றாலே விடுதலைப் புலிப் போராளிகளின் இரத்தமும் உப்பு வயல்களுக்குள் நகர்ந்து செல்லும் இரவுகளும் ஞாபகம் வருகின்றன. நித்தமும் வெடிக்கும் குண்டுகளின் சத்தங்கள் ஆனையிறவில் இருந்து கேட்கும். அந்நியர்களால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவை இருநூற்று நாற்பது வருடங்களின் பின்னர் ஈழப் போராளிகள் கைப்பறினார்கள் என்ற செய்தி நவீனத் தமிழர்களின் வீரக் கதை என்று தமிழனம் கொண்டாடியது. இன்று ஆனையிறவு வீழ்ந்து கிடக்கிறது என்பதையே அதனைச் சுற்றியுள்ள நிலமைகள் காட்டுகின்றன.

ஆனையிறவின் அழகும் உப்பளத்து தொழிலும் தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. ஈழத்தில் வடக்கில் முக்கியமான வளம் கொழிக்கும் கடல்நிலமாக ஆனையிறவு துலங்குகிறது. ஈழத்தின் வடக்கில் யாழ் குடநாட்டையும் வன்னிப் பெருநிலப் பரப்பையும் இணைக்கிற இந்த கடலோசரச் சமவெளி கிளிநொச்சி மாவடத்திற்குள் அடங்குகிறது. இலங்கையிலேயே உள்ள மிகப்பெரிய உப்பளம் இது என்று கூறப்படுகிறது. கடலும் உப்பு வயல்களும் வெளியும் சூரிய வெளிச்சமும் காற்றும் என்று மனதை கவர்ந்து கொள்ளையிடும் அழகிய பிரதேசமாக காட்சியளிக்கிறது. இன்று மீண்டும் வீழ்ந்த கடல்நிலம் என்ற அடையாளத்துடன் இருக்கிறது. ஆனையிறவைச் சுற்றிச் சுற்றி இவ்விதமான அடையாளங்களையே படைகள் உருவாக்கியிருக்கின்றன.

யுத்த வெற்றியின் பெருங் குறியீடாக கொடுங் கைகளால் தூக்கி நிமர்த்தி வைத்திருக்கும் இலங்கையின் உருவமும் தாமரை மலர்களும் சிங்களவர்களின் கண்களை மனங்களை மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனையிறவு இப்பொழுது சிங்கள சுற்றுலாப் பயணிகளின் உல்லாசத் தளங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஆனையிறிவில் வாழ்ந்த ஆனையிறவு உப்பளத்தில் வேலை செய்த ஈழ மக்களுக்கு அந்த இடம் ஆறாத புண்ணாக கொதித்துக் கொண்டிருக்கிறது. யுத்தம் எவ்வளவு கொடுமையானது என்பதையும் ஈழ மக்களின் கனவு எவ்வளவு கொடுமையாக கொல்லப்பட்டது என்பதையும் சொல்லும் அந்த யுத்த நினைவுத்தூபியை எந்தத் தமழர்களும் இதுவரையில் ஏறி நெருங்கிச் சென்று பார்த்ததில்லை. சிங்கள சுற்றூலப் பயணிகள் அதை சுற்றி சுற்றி வருகிறார்கள். அந்த தூபியைச் சுற்றி வன்னி யுத்தக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

யுத்தக் கதைகள் எவ்வளவு கொடுமையானவை? அவற்றால் இன்றும் எமது காயங்கள் ஆறாது சிதலும் குருதியும் ஒழுகிறது என்பது இந்தக் கதைகளையும் ஓவியங்களையும் படிப்பவர்களுக்குப் புரிவதில்லை. அவற்றை ரசித்து வீரப்படைகளின் சாகசங்களை கொண்டாடும் ஆக்கிரமிப்பின் குறியீட்டை இன்று ஆனையிறவு தாங்கி வைத்திருக்கிறது. ஆனையிறவில் சிங்கள சுற்றுலாப் பிராணிகள் யாழ் மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று வழிகாட்டி வகுப்புக்கள் எடுப்பதாக இராணுவம் சொல்லுகிறது. நாவற்குழிச் சிங்களக்குடியேற்றம் நடைபெற்ற பினனரே இந்தத் தகவலை இராணுவம் தெரிவித்திருந்தது. யாழ்ப்பாணத்தின் தொன்மையை அடையாளங்களை தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தொனியில் அவற்றை நாசப்படுத்தக் கூடாது என்று சில பதாகைகளில் எழுதப்பட்டுள்ளன. இப்பொழுது யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் வழியின் முக்கியமான சோதனைச்சாவடியாக ஆனையிறவு பாவிக்கப்படுகிறது. திரும்பும் இடங்களெல்லாம் பல்தேசியக் கம்பனிகளின் விளம்பரப்பலகைகள் நிற்கின்றன.

வன்னியில் சிதைந்த நிலத்தில் மக்கள் குடியேறி முன்பே இந்த விளம்பரப்பலகைகள் குடியேறிவிட்டன. கவிஞர் புதுவை இரத்தினதுரை நிறைந்திருந்த பல்தேசிய கம்பனி விளம்பரப் பலகைகளைப் பார்த்து கேட்டதைப்போல ‘இதற்காக விதைத்தோம்’ என்று மனம் கேட்கிறது. கடலை மறைக்கும் விளம்பரப்பலகைகளும் சூரியனை மறைக்கும் விளம்பரப்பலகைகளும் போலி வாக்குறுதிகளை அளிக்கின்றன. இந்தக் கடலோரச் சமவெளியில் மீண்டும் காவரலண்களும் முகாங்களும் பெருகி விட்டன. அச்சமும் இருளும் குரூரமும் காவலரண்களில் படிந்திருக்கின்றன.

எப்பிடி இருந்த ஆனையிறவு என்ற வார்த்தைகளை ஆனையிறவின் கடல் படுக்கையுடன் தொடர்பு பட்ட பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனையிறவால் தினமும் பயணிப்பவர்களுடன் ஆனையிறவு உப்பளத்தில் வேலை செய்த சிலரும் இருந்திருக்கிறார்கள். 1980களுக்கு முன்னர் வேலை செய்த அனுபவங்களும் 2000க்குப் பின்னர் வேலை செய்த பலரின் அனுபவங்களும் பேசியபடி இருந்திருக்கின்றன.

ஆனையிறவை காலம் காலமாக அந்நியப் படைகள் ஆண்டு வந்தன. 1760 ஆம் ஆண்டு போர்த்துக் கேயர் அமைத்த படைத்தளம் முதல் 1952 ஆம் ஆண்டு இலங்கைப் படை அமைத்த படைத்தளம் என்று ஆக்கிரமிக்கப்பட்ட நிலமாக இருந்த ஆனையிறவு பின்னர் 2000ஆம் ஈழத் தமிழ் போராளிகளிடம் வீழ்ந்தது. 1991இல் ‘ஆகாயக் கடவெளிச் சமர்’ என்ற பெயரில் விடுதலைப் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்ற கடும் சமரில் ஈடுபட்ட பொழுதும் அது தோல்வியில் முடிவடைந்தது. அந்த யுத்தம் ஒரு மாதம் வரை நடந்தது. பின்னர் ஏப்பிரல் 22ஆம் நாள் 2000ஆம் ஆண்டு நடத்திய ஓயாத அலைகள் சமரில் ஆனையிறவு ஈழப் போராளிகளின் வசமானது. அதுநாள் வரை இதற்காக சுமார் 3000 ஈழப் போராளிகள் களப்பலியானார்கள். ஆனையிறவு ஒரு இரத்தச் சமவெளியாயிருக்கிறது.

மக்களின் இரத்தமும் போராளிகளின் இரத்தமும் கொட்டப்பட்ட பகுதி. சிறிய வயதில் அந்தப் பகுதியால் லொறி ஒன்றில் நான் செல்லும் பொழுது நான் வந்த லொறியை ஓட்டியவரை ஏதோ சுடும் பகுதியில் காலை வைக்கும்படி இராணுவத்தினர் பணித்தனர். அந்த நாட்களில் சோதனைகளும் விசாரணைகளும் நீண்டு கொண்டு செல்லும். சிலர் அந்த சந்தர்பங்களில் காணாமல் போவார்கள் என்று என்னை அழைத்துச் சென்ற அம்மம்மா சொன்னார். பெருங்கோட்டையைப்போல இராணுவக் குடியிருப்புக்கள் கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கும். உயர உயர உப்பு மேடுகள் கூட்டட்பட்டு மூடப்பட்டிருக்கும். ஈழத்து மக்களின் இனப்பிரச்சினைக் காலத்தில் ஆனையிறவு எப்பொழுதும் மூடுண்டே இருந்தது. அதனால் யாழ்ப்பாண மக்களும் வன்னி மக்களும் பயணம் செய்து கொள்ள பெரும் சிரமப்பட்டடார்கள். அந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்திய கிளாலி பாதையிலும் மக்கள் கொலை செய்யப்பட்டு கடலில் எறியப்பட்டார்கள்.

இந்தப் பகுதியை மீட்கும் சமர்களுக்கான வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போராளிகளின் துயர்க்கதைகள் கொடுமையானவை. அதேவேளை திகிலும் சாதூரியமும் நிறைந்தவை. விடுதலைப் புலிகளின்; இரத்தத்தால் ஆனையிறவு கடல்சமவெளி நனைந்தது. 2009 ஜனவரி 10 இல் இலங்கை இராணுவம் மீண்டும் ஆனையிறவை கைப்பற்றியது. பரந்தனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முகமாலை, நாகர்கோவில், பளை, இயக்கச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளை விட்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து ஆனையிறவில் மீண்டும் இராணுவம் நுழைந்தது.

ஆனையிறவு முன்னரங்க களத்தில் வெடிகுண்டு தாங்கிய போராளி ஒருவர் இராணுவத்தின் நிலைகளை நோக்கி நகர்ந்த பொழுது மரணம் அடைந்தார். அவரின் நினைவாக போராளிகள் ஆனையிறவை மீட்ட பொழுது அந்தப் போர்த்தாங்கியை நினைவுச் சின்னமாக்கினார்கள். ஆனையிறவுக்காக இரத்தம் சிந்திய எல்லாப் போராளிகளையும் அது கண்ணுக்கு முன்னால் கொண்டு வருகிறது. போராளிகள் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்து நகர்ந்தார்கள் என்ற தீரங்களையும் அது சொல்கிறது. இன்று அதனை சிங்கள மக்களின் ரசனைக்கு படைகள் தீணியாக மாற்றியுள்ளன. அதில் மோதி பலியான இராணுவத்தினனின் கதை எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கதை இப்படித்தான் இருக்கிறது. ‘ சிறிலங்க சிங்க றெஜிமன்டில் – கோப்ரல் காமினி குலரத்ன வை ஜி (பரம வீர விபூஷன) இல்லாவிட்டால் ஹசல வீரயானன் என்ற உன்னதமானவரால் அழிக்கப்பட்ட தீவிரவாதிகளின் புல்டோஸராகும். தாய் நாட்டின் பேரில் உயிர் தியாகத்திற்காக பல உன்னத மனிதர்கள் உதயமானார்கள் இம்மண்ணில். அந்த மாவீரர்களைப் பாதுகாக்கவும் தாய் நாட்டின் விடுதலைக்காகவும் தன்னுயிரையே தியாகம் செய்த இம்மண் பெற்றெடுத்த ஒரே ஒரு தவப்புதல்வன் நீயே… மிலேச்சப் பயங்கரவாதிகளினால் 1991 ஜீலை 13ஆம் திகதி இரவு ஆயிரக்கணக்கான வெடிபொருட்களைப் பொருத்தி இம்முகாமுக்கு அனுப்பப்பட்ட புல்டோஸர்…’ இப்படி தங்கள் இனவாதத்தையும் ஆக்கிரமிப்பையும் படைகள் எழுதிவைத்துள்ளன.

ஆனால் இன விடுதலைக்காகவும் ஆக்கிரமிப்புமுகாங்களை அழிப்பதற்காகவும் இராணுவமுகாமுக்குள் நுழைந்த போராளியின் முகம் அழிக்க முடியாதபடி இந்தப் போர்த்தாங்கியில் படிந்திருக்கிறது. அந்த போர்த்தாங்கியினைச் சுற்றி இராணுவத்தினரின் இராணுவ உணவகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. போர்த்தாங்கியை பார்வையிட்டு அதன்மீதெழுதப்பட்ட குறிப்புக்களை படித்து உண்டு ஆறிச் செல்வதற்கான பல வசிதகள் காணப்படுகின்றன. சுற்றுலாத்தளம்போல அழிவு அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் ஆனையிறவில் காணப்படுகின்றன இரண்டாவது துயரவும் அதன் சின்னமும்.

ஆனையிறவில் உள்ள குறிஞ்சித்தீவு உப்பு வயல்களை நம்பி வாழந்த குடும்பங்களின் கதைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை. அந்தப் பகுதியில் இறால்களை மீன்களை பிடிப்பதை நம்பி வாழும் மக்களின் கதைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை. முப்பதாண்டுகளாய் தேடித் தேடி அழிக்கப்படும் அவர்களின் வாழ்க்கை சிதைந்த கதைகளைப் பற்றி எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை. உப்பளத் தொழிற்சாலை கட்டிடம் இப்பொழுது இராணுவத்தின் முகாமாகியிருக்கிறது. உயர உயர முகாங்களிட்டு படைகள் எல்லா இடங்களிலும் தங்கியிருக்கின்றனர். நாளை இறால் பிடிக்கலாம். நாளை உப்பளம் இயங்கும் என்று கண்கட்டும் கதைகளால் இழுத்தடிக்கப்படுகிறது. அந்த கடற்சமவெளியை நம்பி வாழந்த மக்கள் தொழிலற்று அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாமல் உப்புவயல்களும் அழிந்த தொழிற்சாலைகளும் கடலும் இராணுவ மயத்தால் மூடுண்டு கிடக்கிறது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More