தென் கரீபியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்த பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஏஞ்சல் கஹோனா (Ángel Gahona) என்ற பத்திரிகையாளரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நிக்கரகுவாவில், ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்ற நிலையில் இந்த போராட்டங்களின் போது வன்முறை மூண்டது. இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் சுமார் 25 பேர் பலியாகி உள்ளதாக உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், அங்கு தென் கரீபியன் கடற்கரை பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்த குறித்த பத்திரிகையாளர்; தனது கைத்தொலைபேசி மூலம் சேதம் அடைந்த பண எந்திரம் ஒன்றை படம் பிடித்து கொண்டு இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுட்டது யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.
அதேவேளை ஓய்வூதிய திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை எதிர்த்து இடம்பெற்ற கண்டன போராட்டங்களை தொடர்ந்து அதை திரும்ப பெறுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி டானியல் ஒர்டேகா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது