குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமஸ்டி ஆட்சி முறைமை நோக்கிச் செல்ல வடக்கு அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக சமஸ்டி ஆட்சி முறைமை நோக்கி நாட்டை நகர்த்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிஓயா பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஊடக அடக்குமுறையை அரச கொள்கையாக பின்பற்றுகின்றது – மஹிந்த ராஜபக்ஸ
அரசாங்கம் ஊடக அடக்குமுறைகளை அரச கொள்கையாக பின்பற்றி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மற்றும் அரசியல் சாசனம் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தி வரும் நிலையில் அரசாங்கம் ஊடகங்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் அண்மையில் தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட செய்தி ஒன்று தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளர் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி முடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமது ஊடக நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக, சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவை தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் தகவல்கள் ஊடகங்களில் பிரசுரமாவதனை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு ஊடகங்களை அடக்கி ஒடுக்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.