!
வடக்கு – கிழக்கில் சிற்றூழியர் களாக சிங்களவர்கள் நியமிக்கப் படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்த வாக்குறுதி 20 நாள்களுக்குள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி சிற்றூழியர்களாக தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்கள், யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு தினங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டச் செயலகத்திற்கு தெரியாமல் நேரடியாக பிரதேச செயலகங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி சிற்றூழியர்களுக்கு 16 வெற்றிடங்கள் நிலவுகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறை, நல்லூர், சாவகச்சேரி பிரதேச செயலகங்களுக்கு கண்டியைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுவோர் சிற்றூழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சால் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களுடன் அவர்கள் நேரடியாக பிரதேச செயலகங்களுக்குச் சென்றுள்ளனர்.
சிங்கள சிற்றூழியர் நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் மாவட்டச் செயலக சமுர்த்தி திணைக்களத்துக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
“இந்த நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு அறிவித்தல் வெளியிடப்பட்டமை தொடர்பாக எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. சமுர்த்தி அமைச்சாலோ, திணைக்களத்தாலோ எந்தவொரு கூட்டங்களிலும் தெரியப்படுத்தப்படவுமில்லை. இங்குள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவது என்பது தொடர்பிலுமோ எதுவும் அறியத் தரப்படவில்லை”-என மாவட்ட சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 நிபந்தனைகளை விதித்திருந்தது. வடக்கு – கிழக்கில் சிற்றூழியர்களாக சிங்களவர்கள் நியமிக்கப்படக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.
இந்த நிபந்தனைகளைச் செயற்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டு கூட்டமைப்புக்கு கடிதம் வழங்கியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்றபோது, கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அந்தக் கடிதத்தை காண்பித்திருந்தார்.
வாக்குறுதி வழங்கி 20 நாள்களுக்குள்ளேயே அதனை பிரதமர் உதாசீனம் செய்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.