குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்தில் இருந்து கொண்டு கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சிப்பது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய இது ஒழுக்கத்திற்கு விரோதமான செயல் எனவும் கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்களை நீக்க முயற்சிக்கும் சிலருக்கு தமது தொகுதிகளை கூட வெல்ல முடியாது போனதாகவும் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சிப்பது நியாயமானதல்ல. தலைமைத்துவம் தொடர்பாக பிரச்சினைகள் இருந்தால், அதனை கட்சியின் செயற்குழுவின் தெரிவிக்க வேண்டும் எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, எந்த விசாரணைகளுக்கும் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.