பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இமானுவல் மக்ரோன் 3 நாட்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணத்தில் அமெரிக்கா – பிரான்ஸ் நாடுகளுக்கிடையேயான உறவு மற்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் போன்றவை முக்கியம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா விரைவில் இணையும் என மக்ரோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மக்ரோன் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை தியாகம் செய்து ஒருவேளை உலகத்தை அழித்துக் கொண்டிருக்கிறோமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நாம் கடற்கரையை அழிக்கிறோம். கரியமில வாயுக்களை வெளியிட்டு நமது பல்லுயிர்த் தன்மையை அழித்துக்கொண்டு இருக்கிறோம். மாற்று உலகம் இல்லை. யதார்த்தங்களை தற்போது எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு நாள் நிச்சயம் அமெரிக்கா பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும். சூழலைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்
கடந்த 2017 ஆம் ஆண்டு , பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது