காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் தழுவிய இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் ஆரம்பித்த அவர் தலைமையிலான விவசாயிகள், நேற்று கரூர் வந்தடைந்தனர்
அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழகத்தை அழிக்க மத்திய அரசு நினைக்கிறது. தமிழக ஆட்சியாளர்களும் அதற்கு துணை போகின்றனர். வரும் மே 3-ம் திகதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கையில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இது மக்கள் போராட்டமாக மாறவேண்டும். அதுவரை கட்சிகள், அமைப்புகள், விவசாயிகளின் போராட்டங்கள் தொடரும் என அவர் தெரிவித்தார். இந்த இருசக்கர வாகன பிரச்சார பயணம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாகச் சென்று வரும் 29-ம் திகதி திருவாரூரில் நிறைவடையவுள்ளது