குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அறுபது ஆண்டுகளுக்கு முன்னதாக காணாமல் போன கனேடிய படைவீரர் ஒருவர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடற்படை விமானி ஒருவர் பற்றிய தகவல்களே இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளன. 1958ம் ஆண்டில் லெப்டினன் பெரி டோரி என்னும் கனேடிய படைவீரர் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது விமானம் கடலில் வீழ்ந்து நொருங்கியதனால் அவர் புளொரிடா கடற்பரப்பில் வைத்து காணாமல் போயிருந்தார்.
நீண்ட காலமாக பெரி டோரி காணாமல் போன சம்பவம் பற்றி உரிய தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் இது குறித்து அவரது குடும்பத்தினர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பி வந்திருந்தனர். இந்த நிலையில் அண்மையில் புளொரிடா அதிகாரிகள் டோரியின் குடும்பத்தினைத் தொடர்பு கொண்டு, சில தகவல்களை தெரிவித்துள்ளனர்.
டோரி விமான விபத்தில் மரணித்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவரது சில உடமைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரி டோரி பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றமை மகிழ்ச்சி அளிப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.