குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் கீழ் ருவான் விஜேவர்தன குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அமுல்படுத்துவது தொடர்பில் கொள்கை ரீதியான முடிவுகளை எடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் என்ற முறையில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் .இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று, கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளுக்காக பல இளம் உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தொடர்பாடல் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ, பொருளாளர் ஹர்ச டி சில்வா, தொழிற்சங்க செயலாளர் அஜித் பீ. பெரேரா ஆகியோர் கட்சியை பொறுபேற்று தலைமைத்துவத்தை வழங்க புதிதாக இணைந்துக்கொண்டுள்ளனர்.
புதிய தலைமைத்துவ அணியை உருவாக்க, இவர்கள் பிரதித் தலைவர் மற்றும் உப தலைவருடன் இணைந்து புதிய பலத்துடன் கட்சியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல அடித்தளம் இடப்பட்டுள்ளது. இவர்கள் தமது காலத்தை சக்தியையும் கட்சியின் நலனுக்காக அர்ப்பணிப்பார்கள்.
இந்த வெற்றிகரமான பயணத்தை மேலும் வலுப்படுத்த பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பல புதிய பொறுப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்சியினை வலுப்படுத்தும் பணிகளை திறம்பட மேற்கொள்ளக் கூடிய பின்னணி உருவாகும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.