குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
5000 ரூபா நோட்டு ரத்து செய்யப்பட வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர 5000 ரூபாவினை தடை செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு 5000 ரூபா நோட்டை ரத்து செய்வதன் மூலம் உண்மையில் கறுப்புப் பணத்தை வைத்திருப்பது ராஜபக்ஸக்களா அல்லது மத்திய வங்கி கள்வர்களா என்பது அம்பலமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
1973ம் ஆண்டு அப்போது காணப்பட்ட உச்ச அளவு பெறுமதி வாய்ந்த 100 ரூபா நோட்டை அப்போதைய நிதி அமைச்சர் என்.எம் பெரேரா தடை செய்திருந்தார் எனவும் இது ஒன்றும் இலங்கைக்கு புதிய விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.