தொழிற்சங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கட்சி பேதம் பார்க்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும் மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் தொழிற்சங்கப் பிரிதிநிதிகளுக்குமிடையே இன்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார். ஊழியர் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகள், சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஊழியர்களுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜனாபதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிய பங்களிப்பைச் செய்கின்றவர்கள் என்றவகையில் அப்பிரதிநிதிகள் தமது தொழில்ரீதியான பிரச்சினைக்கு கலந்துரையாடல் மூலமாக தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விரைவில் அமைச்சில் ஆறு உபகுழுக்களை நியமித்து பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.