இமாச்சலப்பிரதேசத்தில் கசாலி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற பெண் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த விடுதி உரிமையாளர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
அரசு அதிகாரியைப் பகலிலியே பலரின் முன் சுட்டுக் கொலை செய்ததற்குப் பாதுகாப்பு அளிக்காத சூழல் குறித்து வேதனை தெரிவித்து, தானாக முன்வந்து, உச்ச நீதிமன்றம் பதிவு செய்த இந்த வழக்கு நாளை 3-ம் திகதி விசாரணைக்கு வருகிறது. பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வரும் இமாச்சலப் பிரதேச மாநிலம் கசாலி நகரில் சட்டவிரோதமாக பலமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது குறித்து வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ; சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டிடங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.
அப்போது, கசாலி நகரில் உள்ள நாராயணி கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர் விஜய் தாக்கூருக்கும், நகரத் துணை திட்ட அலுவலர் சைல் பாலா சர்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, தாக்கூர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சைல் பாலா சர்மாவை சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.