அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா வரலாற்று ரீதியான வருத்தத்தை சந்திக்க நேரிடும் என ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் மே 12-ம் திகதி டிரம்ப் ஈரானுடைய அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதா இல்லையா என முடிவெடுக்கவுள்ள நிலையில் ரூஹானியின் இக்கருத்து வெளியாகியுள்ளது
கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரானுடன் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அணுசக்தி குறித்த ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தன. ஈரான் மீதான தடைகளை நீக்குவதற்கு கைமாறாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தில் சில குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே குறித்த ஒப்பநதமாக அமைந்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தை விட்டு டிரம்ப் வெளியேறக்கூடாது என ஐநாவும் எச்சரித்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தமானது ஒரு பைத்தியக்காரத்னமானது எனத் தெரிவித்து மே-12ம் திகதி அன்று அமெரிக்கா ஒப்பந்தத்தை முறித்துவிடும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் ஈரானிய அரச தொலைக்காட்சியில் உரையாற்றிய ரூஹானி இந்த ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால், இதற்காக வரலாற்று ரீதியான வருத்தத்தை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் டிரம்ப் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்கொள்ளவதற்கான திட்டம் தம்மிடம் உள்ளது எனவும் தாங்கள் அதனை எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.