நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் தொலைதூரம் பயணிக்க நேரிட்டது ஏன் என்பது குறித்து தமிழக அரசு மற்றும் சி.பி.எஸ்.இ. நிறுவனத்திடம் தேசிய மனித உரிமை ஆணையகம் விளக்கம் கோரியுள்ளது. நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்ட பெரும் இன்னல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கும், சி.பி.எஸ்.இ. நிறுவனத்துக்கும் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியது.
தமிழ்நாட்டில் இருந்து 3,685 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக வெளிமாநிலங்களுக்கு செல்லவேண்டி இருந்தது என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளதாக ஒரு பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வு மையங்களை தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஏன் அமைக்க முடியவில்லை என்ற காரணத்தை சி.பி.எஸ்.இ. மற்றும் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
தமிழக மாணவ-மாணவியர் வேறு மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் தன்னுடைய மகனுடன் சென்ற தந்தை ஒருவர் கேரளாவில் மாரடைப்பால் இறந்துள்ளார். இது மிகவும் தீவிரமான மனித உரிமை மீறலாக கருதப்படுகிறது.
எனவே, நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவ-மாணவியர் தொலைதூர இடங்களுக்கு பயணிக்க நேரிட்டது ஏன்? என்பது குறித்து விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது