வரட்சி நீடிப்பதன் காரணமாக கர்நாடகா அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கர்நாடக அரசு சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை தமிழக அரசு சார்பிலும் இடைக்கால மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘முதலில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
அத்துடன் இந்திய மத்திய அரசும் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், ‘வரைவு திட்டம் இறுதி கட்ட நிலையில் உள்ளது. இன் னும் 10 நாட்களுக்குள் அது தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கர்நாடக அரச சட்டத்தரணி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரச சட்டத்தரணி, ‘மத்திய அரசை நம்பினால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. தமிழக அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது’ என்று குற்றம் சுமத்தினார்.
இதையடுத்து மத்திய அரசு தலைமை சட்டத்தரணி வேணுகோபால் சில வேண்டுகோளை முன் வைத்தார்.. அவர் கூறியதாவது:-
கர்நாடக தேர்தல் காரணமாக வரைவு திட்டம் குறித்து எங்களால் எந்த இறுதி முடிவையும் எடுக்க இயலவில்லை. காவிரி வரைவு திட்டத்தை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டுமானால் 10 நாட்கள் அவகாசம் வேண்டும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டி உள்ளது. எனவே 14-ந் திகதி வரையாவது இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கூறினார்.
மத்திய அரசு வழக்கறிஞரின் வாதத்திற்கு தமிழக அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தீர்ப்பை அமுல்படுத்தாமை நீதிமன்ற அவமதிப்பே என தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 14ஆம் திகதி வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இதேவேளை 14ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவரும் நிலையில் அ தற்கு அடுத்தநாள் 15ஆம் திகதி கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.