இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளது. மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு பயந்து வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவின் ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இவர்களில் பலர் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து எனவும் தெரிவித்த மத்திய அரசு, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற தனிக்குழுவை அமைத்தது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பில் பதிவுசெய்து இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளான முஹம்மது சலிமுல்லா, முஹம்மது ஷாகிர் ஆகியோர் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தங்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப கூடாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கவில்ன்கர், சந்திரசூட் அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்த வழக்கின் மறுவிசாரணையின்போது, தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளை மற்ற மாநிலங்களும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் புதிய கோரிக்கை விடுத்திருந்தனர்
மனுதாரர்களின் கோரிக்கையை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. எனினும், டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் அரசு சார்பில் வழங்கப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே மாதம் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் மனுவை பரிசீலனைக்கு ஏற்றுகொண்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் மறுவிசாரணையை எதிர் வரும் 11-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.