ஆதார் அட்டையை கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை முடிந்த நிலையில், திகதி குறிப்பிடப்படாமல் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
வங்கிக்கணக்குகள், 50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைப் பரிமாற்றங்கள், கையடக்கத் தொலைபேசி இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல எனக் கூறி உச்ச நீதிமன்றில் பல்வேறு தரப்பினர் வழக்குகளை தொடுத்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் முதல் விசாரித்து வந்தது.
ஒவ்வொரு முறை விசாரணையின் போதும் சில இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி தீர்ப்பு வைக்கப்பட்டது.