காணாமல் போனோர் குறித்த விசாரணைகளை இவர்களிடம் இருந்து ஆரம்பியுங்கள் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்..
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போன 280 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போன 280 பேரின் பெயர் விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தென் ஆபிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பினால் இந்த பெயர் விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் யுத்த கால இராணுவத் தலைமைகளிடம் கேள்வி எழுப்ப வேண்டுமென தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களில் குறைந்தபட்சம் 29 சிறுவர் சிறுமியர் அங்கம் வகிக்கின்றனர் என தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டு மே மாதம 18ம் திகதி அல்லது அதனை அண்டிய நாள் ஒன்றில் இந்தக் சிறுவர்கள் பெற்றோருடன் காணாமல் போயுள்ளனர். இதுவே இலங்கையில் ஒரே நாளில் அதிகளவில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் என இந்த திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். ஒரே நாளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காணாமல் போனமை குறித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நேரில் கண்ட சாட்சியாளர்கள் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின் இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரிடமிருந்து இந்த விசாரகைணைத் தொடர முடியும் என காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். ஏனெனில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மக்கள் சரணடைந்தமை இந்த இருவருக்கும் தெரியும் என நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலை வழங்க முடியாது என 58ம் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களையும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மே மாதம் 18ம் திகதி வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் சரணடைந்த போது, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தார் எனவும் புலிகளின் அரசியல் தலைவர்களுடன் சவேந்திர சில்வா கைலாகு செய்தார் எனவும் என நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
கத்தோலிக்க மதகுரு ஒருவரின் பிரசன்னத்திற்கு மத்தியில் புலித் தலைவர்கள் வட்டுவாக்கல் பாலத்திற்கு அருகாமையில் படையினரிடம் சரணடைந்த போது, மேஜர் ஜெனரல் ஜயகத் ஜயசூரியவும் குறித்த பாலத்திற்கு அருகாமையில் பிரசன்னமாகியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடொன்றில் யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும், தமக்கு தண்டனை விதிக்கப்படக்கூடும் என்ற காரணத்தினால் ஜயசூரிய அங்கிருந்து தப்பி நாட்டுக்கு திரும்பியிருந்தார் எனபதும் நினைவுகொள்ளத்தாக்கது.
இந்த நிலையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்து அதன் பின்னர் காணாமல் போனோர் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தற்போதைக்கு அந்தப் பட்டியலில் 280 பேரின் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சூகா, இவ்வாறானவர்களின் பெயர் விபரங்கள, புகைப்படங்கள் உள்ளிட்ட விபரங்கள் இருந்தால், உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்..