பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நாவற்குழி பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் எந்த இராணுவ முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டு இல்லை என்பதனை என்னால் உறுதியாக கூற முடியும் என பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர தெரிவித்தார்.
நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.
அதன் போது மனு தாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டு உள்ள தமது உறவுகள் தற்போதும் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்கள் என்பதனை நம்புகின்றார்கள் என தெரிவித்தனர்.
அதன் போது , நாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை. நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
எனக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இல்லை என்பதனை உறுதியாக கூற முடியும்.
அவ்வாறு எவரேனும் தடுத்து வைக்கப்பட்டு இருந்தால் அவர்களை மீட்டு அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டமைக்கு எதிராக இந்த நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுப்பேன். என தெரிவித்தார்.