இலங்கையின் நீதித் துறைக் கட்டமைப்புக்குட்பட்ட எந்த விசாரணைகளுக்கும் இலங்கை இராணுவம் தயார் –
இலங்கையின் நீதித் துறைக் கட்டமைப்புக்குட்பட்ட எந்த விசாரணைகளுக்கும் இலங்கை இராணுவம் தயாராகவே உள்ளது. பன்னாட்டுச் சமூகத்தின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தால் இலங்கை மட்டுமல்ல, எந்தவொரு நாடும் ஆக்கபூர்வமடையாது. போரில் கூட நாம் வெற்றியடைந்திருக்கமாட்டோம். என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘த இந்து’ நாளிதழுக்கு அளித்த செவ்வியில்,
இலங்கை இப்போது அமைதியான நாடாக இருக்கின்றது. வெளியிலிருந்து ஆக்கிரமிப்பு போன்றவை இல்லாவிட்டாலும் அமைதியை விரும்பாத சில தீயசக்திகள் ஆங்காங்கே குழப்பங்களை அவ்வப்போது ஏற்படுத்துகின்றன.
புலித் தீவிரவாதத்தின் பெயரில் எந்தவொரு வெடிப்புச் சம்பவமோ அல்லது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமோ 2009 மே 19ஆம் திகதிக்குப் பின்னர் இதுவரை ஏற்பட்டது இல்லை. போருக்குப் பின்னரான முன்னேற்ற விடயத்தில் உலக நாடுகளுக்கு நாம் முன்மாதிரியாக இருக்கின்றோம்.
வடக்கில் இராணுவத்தினர் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளனர். பெருமளவு காணிகள் மீளவும் மக்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல் உட்பட்ட விடயங்களைத் தடுக்கவும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் படையினரை நிலைநிறுத்தல் அவசியமாகின்றது.
சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடுகளைச் செய்வதில்லை. போர் நீண்டகாலம் நடைபெற்ற ஒரு பகுதிக்கு அமைதிக் காலத்தில் சிவில் செயற்பாடுகளுக்கு படையினரின் ஒத்துழைப்பு தேவை.
இது தொடர்பில் நான் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளேன். சிலர் எமது பிரசன்னத்தை எதிர்த்தாலும் பலர் ஆதரிக்கின்றனர். இராணுவம் நிலைகொண்டிருக்கும் மக்களின் மேலும பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும். காணிகள் விடுவிப்பின்போது பல விமர்சனங்கள் வந்தாலும் எந்த அரசியல் அழுத்தங்களுமின்றி இராணுவம் இது விடயத்தில் சுயாதீனமாக முடிவுகளை எடுக்கின்றது. தேசிய பாதுகாப்பு விடயத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளவும் முடியாது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.