குமுதினிப் படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று பிரித்தானியாவில் அனுஷ்ட்டிக்கப்பட்டது. நெடுந்தீவு ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது நோர்த்தோல்ட், கிராம சமூக நிலையத்தில் (Northolt Village Community Centre, Ealing Road, Northolt, Middlesex UB5 6AD) நடைபெற்றது.
மாலை 6.30 க்கு நெடுந்தீவு ஒன்றியத்தின் தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி தலைமையில் ஆரம்பமாகிய அஞ்சலி நிகழ்வு இரவு 10.30 க்கு நிறைவு பெற்றது. நிகழ்வில் நெடுந்தீவினைச் சேர்ந்த மக்கள் மற்றும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ஊடகவியலார்களும் கலந்துகொண்டனர்.
குமுதினிப் படுகொலை
1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த பொதுமக்கள் ஆழக்கடலில் வழிமறிக்கப்பட்டு கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பச்சிளம் குழந்தை உட்பட, பெண்கள், ஆண்கள் என 33 பேர் மிக்க கொடூரமாகக் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுக்குள்ளாகினர்.
படுகொலையை நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின்படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்களாலேயே மக்கள் கொல்லப்பட்டனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குமுதினிப் படுகொலை 33ஆவது ஆண்டு நினைவுதினத்தின் மற்றுமொரு அஞ்சலி நிகழ்வு, நெடுந்தீவைச் சேர்ந்த குமுதினிப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சவுத்ஹரோவில் நடைபெற்றதாக அறியமுடிகின்றது.