ஜே ஆரின் ஐ.தே.க அமைச்சரவையில் முதன்முதலாக இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தவர் கலாநிதி ஆனந்த டி அல்விஸ்! இராஜாங்க அமைச்சர் என்பது அப்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரேயொரு பதவி. இலங்கை ரூபவாஹினி, ஒலிபரப்புக் கூட்டுத்தாபனங்கள், லங்காபுவத், லேக்கவுஸ் ஆகிய நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சு இவரது ஆகும்.
ஊடகங்களுக்கு எல்லாம் அந்த அமைச்சுப் பதவியே பொறுப்பானது. ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பவரும் இவரே தான். ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்குப் பதில் அளிக்கையில், தமிழ்ப்பகுதியில் நடப்பவை யாவும் பயங்கரவாதம்!; தெற்கில் நடப்பதை கிளர்ச்சி என எழுதவேண்டும் என்று சொன்னவர் இவரே!
தென்னிலங்கையில் ஜே.வி.பி. செய்தவற்றையே அவர் கிளர்ச்சி என்றார். இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் ஐ.தே.க. அரசு அங்கம் வகிக்கும் நல்லிணக்க அரசில் அமைச்சரான டாக்டர் ராஜித சேனாரத்ன, நினைவேந்தலைத் தமிழ் மக்கள் செய்வதை அனுமதிப்பது பற்றி அறிவித்தபோது, ஜே.வி.பி. உள்நாட்டில் தடை செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் வெளிநாடுகளிலும் செய்யப்பட்டுள்ளதே எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, தலைவர் பிரபாகரனுக்கும் தலைவர் ரோகணவுக்கும் இடை யில் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள் எனத் திருப்பிக் கேட்டுள்ளார்.
1980 களில் விஜயகுமாரதுங்க ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து பிரிந்து சென்று மக்கள் கட்சியை ஆரம்பித்தபோது அக் கட்சியில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்தவரே ராஜித. அரச பல்வைத்தியர் சங்கத்தில் இருந்த காலத்திலேயே இடது சாரிய சிந்தனைகளுடன் ஐ.தே.க வின் கொள்கைகளை விமர்சித்த ஒருவராவார்.
1988 இல் ஸ்ரீ.ல.சு.கட்சியினரையும் மக்கள் கட்சியினரையும் ஜே.வி.பி. தனது ” கிளர்ச்சி ” யில் குறிவைத்தது. அவ்வேளை , சனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட இவர்களது கட்சி வேட்பாளரான ஒசி அபயகுணசேகரவின் கூட்டத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் , ராஜிதவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சத்திரசிகிச்சையின் பின் நலம் எய்தினார்.
ஆகவே அவரால் தான் இந்தக் கேள்வியை ஊடகவியலாளர்களிடம் கேட்க முடியும்! பொருத்தமான ஒருவரைக் கொண்டே அரசாங்கம் இந்த நினைவேந்தல் தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது!