குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலா ஜனாதிபதி தேர்தலில் நிக்கலோஸ் மடுரோ மீளவும் வெற்றியீட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது . எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பல்வேறு சர்ச்கைகளுக்கு மத்தியில் மடுரோ வெற்றியீட்டியிருந்தார்.
இந்தநிலையில் வெனிசுலாவில் நடைபெற்ற தேர்தல் போலியான ஒன்று எனவும் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை எனவும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தல், வெனிசுலாவின் புனிதமிக்க ஜனநாயக கலாச்சாரத்தை தகர்த்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிலிருந்து வெனிசுலாவுக்கான பொருளாதார பரிவர்த்தனைகள் மற்றும் இதர ஒப்பந்தங்களுக்கும் தடை விதித்து புதிய பொருளாதார தடையை விதித்துள்ளார். மேலும், அமெரிக்க நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான வெனிசுலா அரசின் பங்குகள், விற்பனை, பரிமாற்றங்கள், போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.