தூத்துக்குடி போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்தப்படுகின்றது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட மக்களும், வணிகர்களும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளாகிய நேற்று 144 தடை உத்தரவு போடப்பட்டதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்தநிலையில் இன்று அங்கு முழு கடையடைப்பு நடத்தப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் தூத்துக்குடியிலிருந்து நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுக்க போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதனால் சென்னையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது