இலங்கையின் பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நடைபெற்று முடிந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்காசுதந்திரக்கட்சி பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார். இது குறித்து ஏற்கனவே ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிதுரு ஹெலஉறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் கூட்டு எதிர்க்கட்சி சிந்திப்பதாகவும் அங்கஜன் இராமநாதனை நியமிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அங்கஜன் இராமநாதனை பிரதி சபாநாயகராக நியமிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் எதிர்ப்பு வெளியிட்டதாகவும், தமிழத்தேசிய கூட்டமைப்பு ஆதரிக்காது என தெரிவித்ததாகவும் கொழும்பு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ, எம்.ஏ சுமந்திரனோ இது குறித்து தமிழ் மற்றும் இலங்கையின் பிரதான ஊடகங்களில் உத்தியோகபூர்வ கருத்துக்களை வெளியிடவில்லை.
இதேவேளை அங்கஜன் இராமநாதனுக்கு பிரதி சபாநாயகர் பதவி கிடைக்குமாயின் 48 ஆண்டுகளுக்கு பின் தமிழர் ஒருவருக்கு இந்தப் பதவி மீண்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.